சீனர் கடைகளைப் புறக்கணிக்க மலாய்க்காரர்களிடம் வலியுறுத்து

sabriவிவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப், மலாய்க்காரர்கள்  சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என  வலியுறுத்தியுள்ளார். அப்போதுதான்  அவர்கள்  விலைகளைக்  குறைப்பார்கள்.

இஸ்மாயில்  சப்ரி  முகநூலில்  இவ்வாறு  கூறினார். ஆனால், அந்த  முகநூல் பக்கத்தை  எல்லாராலும் பார்க்க  இயலாது.

ஆனால், அது  அப்படியே  பிரதியெடுக்கப்பட்டு  அம்னோ-ஆதரவு  வலைப்பதிவுகளிலும்  சமூக  வலைத்தளங்களிலும்  வலம்   வந்து  கொண்டிருக்கிறது.

முகநூலில்  அவ்வாறு  பதிவிட்டதை  அமைச்சர்  ஒப்புக்கொண்டிருப்பதாக  மலேசியன்  இன்சைடர்  கூறியது,

கொள்ளை  இலாபம்  தேடும்  நடவடிக்கைகளைத்  தடுக்க  அரசாங்கத்திடம்  சட்ட வழிமுறைகள்  இருக்கின்றன.  ஆனால். விலைகளைக்  குறைக்க  வைக்கும்  சக்தி  பயனீட்டாளர்களிடம்தான்  உள்ளது  என  இஸ்மாயில்  சப்ரி  தம்  பதிவில்  குறிப்பிட்டிருந்தார்.

“பயனீட்டாளர்களில்  பெரும்பகுதி  மலாய்க்காரர்கள். சீனர்கள்:  சிறுபான்மைதான். மலாய்க்காரர்கள்  அவர்களின்  கடைகளைப்  புறக்கணித்தால்  வேறு  வழியில்லாமல்  அவர்கள்  விலைகளைக்  குறைக்கத்தான்  வேண்டியிருக்கும்”, என்றாரவர்.

சீனக்  கடைகள்  வைத்துள்ள  ஹலால்  சான்றிதழ்களும்  ஐயத்துக்கிடமானவைதான்.  என்றாலும்  மலாய்க்காரர்கள்  அக்கடைகளுக்குத்  தயங்காமல்  சென்று  வருகிறார்கள்  என  சப்ரி  கூறினார்.