மந்திரி சாப்ரி: நான் குறிப்பிட்டது எதற்கும் மசியாத சீனர்களைத்தான்

 

sabriபொருள்களின் விலையைக் குறைப்பதற்கு மலாய் பயனீட்டாளர்கள் சீன வணிகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறை அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் விடுத்திருந்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து வழக்கம் போல் அவர் தாம் அனைத்து சீனர் வணிகர்களையும் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மாறாக, எண்ணெயின் விலை குறைந்த பின்னரும் பொருள்களின் விலையைக் குறைக்க மறுக்கும் “எதற்கும் மசியாத சீன வணிகர்கள்” மட்டுமே புறக்கணிக்கப்பட வேண்டும் என்று இப்போது விளக்கம் அளிக்கிறார் அமைச்சர் சாப்ரி.

தாம் கூறியதின் அர்த்தம் என்னவென்றால் பயனீட்டாளர்கள் தங்களுடைய பெரும்பான்மை வலிமையைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதாகும் என்று அவர் மேலும் விளக்கம் அளித்தார்.

போலீஸ் சாப்ரியை விசாரிக்கப் போகிறதாம்

இதனிடையே, அமைச்சர் சாப்ரி அவருடைய முகநூலில் பதிவு செய்திருந்த சினமூட்டும் அறிக்கை குறித்து விசாரிக்கப்படுவதற்காக அழைக்கப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறினார்.

“இன நல்லிணக்கம் மதிக்கப்படுவதை போலீஸ் உறுதி செய்யும்”, என்றும் அவர் கூறினார்.