இஸ்மாயில் சப்ரியின் கருத்துகள் நிந்தனைக்குரியவை

sabriவிவசாயம், விவசாயம்  சார்ந்த  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி, தாம்  கூறியதை  மீட்டுக்கொண்டு சீன  வர்த்தகர்களுக்கு எதிராக எதிராக சுமத்திய  ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளுக்காக  மன்னிப்பும்  கேட்க  வேண்டும்  எனப்  பிரதமர்   உத்தரவிட  வேண்டும்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்   அவ்வாறு செய்யவில்லையென்றால்  அவர்  அவரது  1மலேசியா  சுலோகத்தைத்  தூக்கிக்  குப்பைத்  தொட்டியில்  போடுவதே மேல்.

நேற்று  இஸ்மாயில்  முகநூலில்  ஆத்திரத்துடன்  இட்டிருந்த பதிவுக்கு  இவ்வாறு  எதிர்வினையாற்றியுள்ளார்  டிஏபி  செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங்.

சீனர்களின்   கடைகளைப்  புறக்கணிக்குமாறு  அவர்  மலாய்க்காரர்களைக்  கேட்டுக்கொண்டிருப்பது  ஐயத்துக்கிடமின்றி,  சீன  வர்த்தகர்களுக்கு  எதிராக  மட்டுமல்லாமல்  பொதுவாக  சீனர்  சமூகத்துக்கு  எதிராகவே  மலாய்க்காரரிடையே  தீய-எண்ணத்தை  உருவாக்கி  விட்டிருக்கிறது  என  ஒங்  கூறினார்.
இஸ்மாயில்  சப்ரியின்  முகநூல்  பக்கத்தில்  சிலர்  தெரிவித்துள்ள  கருத்துகளே  இதற்குச்  சான்று.

இதனிடையே, பாஸ்  பாரிட்  புந்தார்  எம்பி  முஜாஹிட்  யுசுப்  ராவா, அமைச்சர்  ஒருவர்  இன அச்சுறுத்தலைப்  பயன்படுத்திக்  கடைக்காரர்களுக்கு  அழுத்தம்  கொடுக்க  முனைவது வெட்கக்கேடான  விசயம்  என்றார்.

“பயனீட்டாளர்களைப்  பயன்படுத்திக்  கொள்ளை இலாபம் அடிக்கும் சந்தர்ப்பவாத  வியாபாரிகள்  என்றுதான்  அவர் வலியுறுத்தியிருக்க  வேண்டுமே  தவிர, எந்தவோர்  இனத்தையும்  தனியே  சுட்டிக்காட்டியிருக்கக்  கூடாது.

“இனத்தைச்  சுட்டிக்காட்டியதன்வழி  மலேசியாவில்  இனங்களுக்கிடையிலான  இடைவெளியை  மேலும்  விரிவடையச் செய்துவிட்டார்.

“ஹலால்  பிரச்னை  இருந்தால் அதிகாரிகளிடம்  செல்ல  வேண்டும். இப்படி  அறிக்கை  விடுப்பது  வெறுப்பைக் கூட்டிச்  சினமூட்டும்  செயலாகும்”, என்றாரவர்.