கெரேத்தாஅப்பி தானா மலாயு பெர்ஹாட்(கேடிஎம்பி) அதன் தொழிற்சங்க ஊழியர்களை மிரட்டுவதாகவும் மீண்டும் மீண்டும் சிறுமைப்படுத்த முயல்வதாகவும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) கூறுகிறது.
ஆகக் கடைசியாக நடந்த சம்பவத்தில், மலாயா ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் அப்துல் ரசாக் முகம்மட் ஹசன் 90 நாள்களுக்குத் தொடர்ச்சியாக மன்னிப்பு கேட்டால்தான் அவருக்கு அவரது வேலை திரும்பவும் கிடைக்கும் என கேடிஎம்பி தலைவர் எலியாஸ் காடிர் மிரட்டினார் என எம்டியுசி தலைமைச் செயலாளர் என். கோபாலகிருஷ்ணன் கூறினார்.
“தொழிற்சங்கத்தை மிரட்டுகிறார்கள். ரசாக் அவரது கடமையைத்தான் செய்தார். அதற்காக எலியாஸ் அவரைத் தண்டிக்கிறார்”, என கோபால் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ரசாக்கும் 90-க்கும் மேற்பட்ட கேடிஎம்பி ஊழியர்களும் எலியாஸுக்கு எதிராக மறியலில் ஈடுபட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
எலியாஸின் தலைமைத்துவம் பலவீனமானது என்பதற்காக அவர்கள் மறியலில் ஈடுபட்டார்களாம்.
இதற்குமுன்பும், எலியாஸுக்கு எதிராக தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டது உண்டு. அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுமுன்னர் அவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாம்.
“கேடிஎம்பி அவர்களைத் திரும்பவும் வேலைக்குச் சேர்த்துக்கொண்டபோது பொதுமன்னிப்பு வழங்கும் நிகழ்வு ஒன்றை நடத்தியது.
“அப்போது, அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. ஊழியர்களுக்கு வேலை திரும்பவும் கிடைத்தால் போதும் என்று இருந்து விட்டோம்”, என்றாரவர்.
அச்சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்ததாம்.
“அவர்கள் ஊழியர்களைச் சிறுமைப்படுத்துகிறார்கள். இப்போது தொழிற்சங்கத்தை மேலும் சிறுமைப்படுத்த 90 நாள் தொடர்சியாக மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் அந்தத் தலைவர்”.
அவரது கோரிக்கை “அதிர்ச்சியளிக்கிறது” என்றாரவர்.
இவ்விவகாரத்தில் எம்டியுசி ரசாக்குக்குப் பக்கபலமாக நிற்கும் என்பதை வலியுறுத்திய கோபால் அரசாங்கம் இதில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எம்டியுசி, நீ மாத்திரம் வேலை நிறுத்தத்தை அறிவிச்சு பாரு! அப்புறம் தானாக மக்கள் உன்பிநாளில் இருப்பார்கள் ! அதுவும் அரசாங்கம் கலைக்க பட்டு, தேர்தல் நேரத்தில நீ வேலை நிறுத்தத்தை அறிவிச்சு பாரு! அப்புறம் தெரியும் யாரு பிரதமர நிர்னையிக்கிரானு ! மாத்தி யோசி எம்டியுசி மாத்தி யோசி எம்டியுசி !