சாபாவுக்குள் நுழைய தமக்குத் தடை விதிக்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்ட டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக், அது குடிநுழைவுத்துறை அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றார்.
சாபா அரசுக்கு அம்மாநிலத்துக்குள் வருவோரைத் தடுக்கும் அதிகாரம் உண்டு என்றாலும், அதைத் தகுந்த காரணமின்றிப் பயன்படுத்தக் கூடாது என்பது அவருடைய வாதம்.
“கடந்த ஆண்டிலிருந்து சரவாக் செல்ல எனக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று சாபா அரசும் தடை விதித்துள்ளதைப் பார்க்கும்போது சொந்த நாட்டில் உள்ள இரண்டு கிழக்கத்திய மாநிலத்துக்கு நான் செல்ல முடியாது என்றாகி விட்டது”, என தெரேசா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பிழைப்புத் தேடி தொழிலாளர்கள் சாபா, சரவாக் மாநிலங்களில் வந்து குவிந்து விடுவதைத் தடுக்கவே இந்தத் தடைவிதிப்பு தொடக்கத்தில் கொண்டுவரப்பட்டதாக சீபூத்தே எம்பி-யுமான கொக் குறிப்பிட்டார்.
ஆனால், தாம் அம்மாநிலங்களின் பொருளாதாரத்துக்கும் மிரட்டலில்லை பாதுகாப்புக்கும் மிரட்டலில்லை என்றாரவர்.
எதிரணியினருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் எதிராக மட்டுமே அந்தத் தடை பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இதிலிருந்தே, பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள அரசுகள் எதிரணியினரை அடக்கி ஒடுக்கக் குடிநுழைவு அதிகாரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது”, என்றாரவர்.