லாக்-அப்பில் ஸுனாரின் அந்த மூன்று நாள்கள்

zunarமூன்று  நாள்களை  லாக்-அப்பில்  கழித்து  திரும்பி இருக்கிறார்  ஸுனார்  என்ற  புனைபெயரில்   பிரபலமாக  விளங்கும்  கேலிச்சித்திரக்காரர்   சுல்கிப்ளி எஸ்.எம். அன்வார்  உல்ஹாஹ். அந்த  மூன்று  நாள்களும்  நினைத்தாலே  இனிக்கும்  சுகமான  நாள்களல்ல.

படுப்பதற்கு  மெத்தையுமில்லை; பாயுமில்லை. பலகைதான்.

“லாக்-அப்பின்  கடைசி நாளில்தான்  ‘குட்மார்னிங்’ துண்டு,  பல்பசை  போன்றவற்றைக்க்  கொடுத்தார்கள்”, என்று  பிணையில்  வெளிவந்த  அவர்  மலேசியாகினிடம்  தெரிவித்தார்.

அவரைத்  திருட்டு, கொள்ளை  முதலிய  கடுங்  குற்றம்புரிந்த  குற்றவாளிகளுடன்  சேர்த்து  அடைத்து  வைத்திருந்தார்கள். ஆனால், உடன்  இருந்தவர்களால்  ஸுனாருக்கு  எந்தப்  பிரச்னையுமில்லை. அவர்கள் “ஒருவரை  ஒருவர்  மதித்து”  நடந்தனர்.

லாக்-அப்-பில்  இருந்த  போலீஸ்காரர்களும்  நல்லவிதமாகவே  நடந்து  கொண்டதாக  அவர்  பாராட்டினார்.

ஆனால், (ஐஜிபி) காலிட்  அபு  பக்காரை  மட்டும்  அவர்  பாராட்டத்  தயாராக  இல்லை.

போலீஸ்  தலைவர்  டிவிட்டரில்  நேரத்தை  வீணாக்காமல்  களத்தில்  இறங்கி  மக்கள்  என்ன  சொல்கிறார்கள்  என்பதைக்  காது  கொடுத்துக்  கேட்க  வேண்டும்  என்றார்.

“நான்  டிவிட்டரில்  பதிவு  செய்வது  மக்களின்  உணர்வுகளைத்தான். தேசிய  போலீஸ் படைத்  தலைவராக  இருங்கள். தேசிய  டிவிட்டர்  தலைவராக  இருக்காதீர்கள்”, என்று  ஸுனார்  குறிப்பிட்டார்.

ஸுனார்,  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கு II-இல் அவரைத்  தண்டித்த  கூட்டரசு  நீதிபதிகளைக்  கேலி  செய்து  டிவிட்டரில்  பதிவிட்டதற்காக செவ்வாய்க்கிழமை  இரவு  கைது  செய்யப்பட்டு  லாக்-அப்பில்  அடைக்கப்பட்டார்.

“என்னை  அடைத்து  வைக்க  ஒரு  காரணத்தைத்  தேடிக்  கொண்டிருந்தார்கள். என்  டிவிட்டர்  பதிவு  ஒரு  நல்ல  வாய்ப்பைத்  தந்ததுபோலும்”, என்றார்.

ஆனாலும், லாக்-அப்பில் அடைபட்டிருந்ததை  எண்ணி  அவர்   கலங்கவில்லை. அஞ்சேன்  துஞ்சேன், செய்யும்  பணியைத்  தொடர்வேன்  என  மார்த் தட்டுகிறார்  ஸுனார்