ரோஸ்சுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை, பழனிவேலு

 

MIC palaniveluசங்கங்களின் பதிவகம் (ரோஸ்) மஇகா தேர்தல் விவகாரம் குறித்து மஇகாவுக்கு அனுப்பியுள்ள அனைத்து கடிதங்களையும் (டிசம்பர் 5, 2014, டிசம்பர் 31, 2014 மற்றும் பெப்ரவரி 6, 2015 தேதியிட்ட கடிதங்கள்) திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஇகா தலைவர் ஜி. பழனிவேலு இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ரோஸ் மஇகாவுக்கு எழுதியிருந்த கடிதங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை மணி 5.00 க்குள் திரும்பப் பெறுவதற்கு பழனிவேலு அவகாசம் அளித்துள்ளார்.

“அவர்கள் (ரோஸ்) அவ்வாறு செவ்வாய்க்கிழமை )பெப்ரவரி 17) மாலை மணி 5க்குள் செய்ய வேண்டும். சுமுகமான தீர்வு காண்பதற்கு எனது பெப்ரவரி 5 ஆம் தேதி இடப்பட்ட கடிதத்தில் நான் தெரிவித்துள்ள முன்மொழிதல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்”, என்று பழனிவேலு திட்டவட்டமாக கூறுகிறார்.

மேலும், ரோஸ் அதன் சட்டவிரோதமான, பாதகமான நடத்தையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்”, என்று அவர் கூறுகிறார்.