1எம்டிபி-க்கு உதவுவதால் ஆனந்தாவுக்கு என்ன இலாபம்?

loan1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்(1எம்டிபி) ரிம2 பில்லியன்  கடனைத்  தீர்க்க  முன்வந்துள்ளார்  ஆனந்தகிருஷ்ணன். இதனால்  ஆனந்தகிருஷ்ணனுக்கு  என்ன இலாபம்  என  வினவுகிறார்  டிஏபி-இன்  டோனி  புவா.

1எம்டிபி  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  நிறுவனம்  என்பதால்  அதில்  என்ன  நடந்தாலும்  அது  வரிசெலுத்துவோரைப்  பாதிக்கும்.

அதனால், கடன்  தொடர்பில் ஆனந்தாவும்  1எம்டிபி-யும்  செய்துகொண்டுள்ள  உடன்பாட்டின்  முழு  விவரங்களையும்  அரசாங்கம்  வெளியிட  வேண்டும்  என்று  அந்த  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  கேட்டுக்கொண்டார்.

“மலேசியர்கள் இரக்கமுள்ளவர்கள்,  தாராள  மனம்  படைத்தவர்கள்தான்  என்றாலும்  எந்தவொரு  கோடீஸ்வரரும்  முழுக்க  முழுக்க  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  ஒரு  நிறுவனத்துக்கு  பல பில்லியன்  ரிங்கிட்  கடனை  எவ்வித  நிபந்தனையுமின்றி  அள்ளிக்கொடுத்திட  மாட்டார்”, என்றவர்  சொன்னார்.

ஆனந்தா கடன்கொடுத்த  விவகாரத்தை 1எம்டிபி  இதுவரை  ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அது  பற்றிப்  பரவலாகவே  பேசப்படுகிறது.

பிப்ரவரி  18 காலக்கெடு  முடிவதற்கு  முன்பே  கடனைத்  தீர்த்து   விட்டதாக  1எம்டிபி  பெருமைப்பட்டுக்கொள்வதையும்  டோனி  புவா  கண்டித்தார்.

“(1எம்டிபி  தலைமை  செயல்  அதிகாரி)  அருள் கந்தசாமி  நவம்பர் 2014-இலிருந்து  மூன்று  தடவை  காலநீட்டிப்பு  கொடுக்கப்பட்டதை  வசதியாக  மறந்து பேசுகிறார்”, என்றாரவர்.