சிருல் கூற்றைத் தள்ளுபடி செய்த ஐஜிபி-க்கு மாபூஸ் கண்டனம்

mafuzபாஸ்  தகவல் தலைவர்  மாபூஸ், அல்டான்துன்யாவை  கொலை  செய்ததாகக்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  சிருல், மலேசியாகினிக்குத்  தொலைபேசிவழி  வழங்கிய  நேர்காணலில்  தனக்கிடப்பட்ட  உத்தரவுப்படி  நடந்துகொண்டதாகக்  கூறியிருப்பதைத்  தள்ளுபடி  செய்த  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்காரைக்  கடிந்து  கொண்டிருக்கிறார்.

“சிருல்  அப்படி  ஒரு  குற்றச்சாட்டை  வெளியிட்டிருக்கும்போது அவர்  அப்படி ஒரு  மறுமொழியைத்  தெரிவித்திருக்கக்  கூடாது”, என  மாபூஸ்  பாஸ்  தலைமையகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

காலிட்,  சிருல்  கூறியதை  வைத்து  அக்கொலைமீது  மறு-விசாரணை  தொடங்கும்  எண்ணம்  போலீசுக்கு  இல்லை  என்று  புதன்கிழமை  கூறினார். வழக்கு  தொடர்பாக  புதிதாகத்  தகவல்  சொல்லியிருந்தால்  மட்டுமே விசாரணையைத்  தொடங்க  முடியும்  என்றாரவர்.

போலீஸ்  படைத்தலைவர்  அப்படிப்  பேசுவது  அழகல்ல  என மாபூஸ்  காட்டமாகக்  கூறினார்.

ஆஸ்திரேலியாவில்  உள்ள  சிருலுடன்  திங்கள்கிழமை,  தொலைபேசிவழி  செய்தியாளர்  கூட்டத்துக்கு  ஏற்பாடு  செய்யப்பட்டிருப்பதாகவும்  மாபூஸ் தெரிவித்தார்.

அச்செய்தியாளர்  கூட்டத்துக்கு  மாபூஸ்  தலைமை  தாங்குவார். அது,  கோலாலும்பூர்  பாஸ்  தலைமையகத்தில்  காலை  மணி 11.30க்குத்  தொடங்கும்.