நமது பல்கலைக்கழகங்கள் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் சமமானவையா?

 

universitiesbest1மலேசியாவின் உயர்க்கல்வி இப்போது மேம்பாடடைந்துள்ள நாடுகளுக்கு, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, சமமானதாக இருக்கிறது. இதனை இந்நாட்டின் உயர்நிலைக் கல்வி நிலையங்களில் 135,000 வெளிநாட்டு மாணவர்கள், மொத்த மாணவர்களில் 10 விழுக்காட்டினர், கல்வி பயில்வது உறுதிப்படுத்துகிறது என்று இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ கூறியதாக பெர்னாமா வெளியிட்டுள்ள செய்தி தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக செரடாங் நாடளுமன்ற உறுப்பினர் ஓங் கியன் மிங் கூறுகிறார்.

அவரது கூற்றை நிரூபிப்பதற்கு அவர் அளித்த ஆதாரம் நகைப்பிற்குரியது என்பதோடு அது கல்வி அமைச்சரின் தகுதியை கேலிக்கூத்தாக்கியுள்ளது என்றாரவர்.

நம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒன்றைக் கொண்டு நமது கல்வி அமைவுமுறை உலகத் தரம் வாய்ந்தது என்பதோடு பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கல்வித் தரத்திற்கு சமமானது என்று கூறுவது, அதுவும் கல்வி அமைச்சர் கூறுவது, ஆபத்தானது என்று ஓங் மேலும் கூறினார்.

இது போன்ற கணிப்பால், அதிக விழுக்காட்டிலான வெளிநாட்டு மாணவர்கள் நமது பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர். ஆகவே, நமது கல்வியின் தரம் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் தரங்களை மிஞ்சி விட்டது என்றாகும் என்றாரவர்.

நமது பல்கலைக்கழகங்கள் எதுவுமே உலகின் மிக உயர்ந்த 100 பல்கலைக்கழகங்கள் வரிசையில் இடம் பெறவில்லை. உலகின் மிக உயர்ந்த 200 பல்கலைக்கழகங்களில் 152 இடத்தைப் பிடித்துள்ள ஒரே மலேசிய பல்கலைக்கழகம் யூனிவர்சிட்டி மலாயா மட்டுமே என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.