டிஎபி எம்பி எச்சரிக்கை: ஹூடுட் மசோதா தாக்கல் செய்தால், பாஸ் வெளியேறி விட்டது என்றாகும்

hududpasoutஎதிர்வரும் மார்ச் 18 இல் கிளந்தான் பாஸ் மாநில அரசு ஹூடுட் சட்ட மசோதாவை தாக்கல் செய்யுமானால் அக்கட்சி பாக்கத்தானிலிருந்து விலகிக்கொண்டு விட்டதாக கருத்தப்படும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ எச்சரித்தார்.

“பாஸ் ஹூடுட் மசோதா தாக்கல் செய்வதை மேற்கொண்டால் அது பாக்கத்தானின் பொதுவான கொள்கை திட்டத்திற்கு எதிரான திறந்த மற்றும் வெளிப்படையான நடவடிக்கை ஆகும்.

“அதுதான் நிலைப்பாடு என்றால், அத்திட்டத்தை ஆதரிக்கும் பாஸ் தலைவர்கள் தாங்கள்தான் பாக்கத்தானிலிருந்து பாஸ்சை வெளியேற்றினோம் என்று தைரியமாக ஒப்புக்கொள்ள வேண்டும்…”, என்று கோபிந்த் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஹூடுட் மசோதாவை தாக்கல் செய்வது பாஸ், டிஎபி மற்றும் பிகேஆர் தலைவர்களுக்கிடையில் தலைமைத்துவ மன்றத்தில் இம்மாதத் தொடக்கத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாகும். ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு இது பற்றி மேற்கொண்டு விவாதிக்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும் என்றாரவர்.

அதன் பின்னர் தலைமைத்துவ மன்றம் இன்னும் கூடவில்லை.