அன்வார் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா, முடியாதா?

 

Hamidi-anwarparliamentsession1அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் பங்கேற்க அனுமதிக்கப்படுவாரா என்பதை மன்னிப்பு வாரியம், சட்டத்துறை தலைவர் (ஏஜி) மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஆகியோரே இறுதி முடிவு செய்வர் என்று கூறுகிறார் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி.

ஆனால், பிகேஆர் அதிகாரிகளைப் பொறுத்தவரையில் முடிவு எடுக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவிடம் இருப்பதாகக் கூறுகின்றனர்.

அன்வாரின் துணைவியாரும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் அன்வாருக்காக அரச மன்னிப்பு கோரும் மனுவை பேரரசரிடம் தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் சட்ட வியாக்கியானம் சம்பந்தப்பட்டதால் அதனை தாம் சட்டத்துறை தலைவர் மற்றும் மக்களவை தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஹமிடி கூறினார்.

மக்களவை தலைவர் பண்டிகார் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். மார்ச் 8 இல் தான் அவர் நாடு திரும்புகிறார். நாடாளுமன்றம் மார்ச் 9 இல் கூடுகிறது.

அரச மன்னிப்பு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது ஒரு முடிவு எடுக்கப்படும் வரையில் அன்வார் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவராகவும் தொடர்ந்து இருப்பார் என்று பிகேஆர் அதிகாரிகள் விவாதிக்கின்றனர்.