அஸ்மின்: நீர் உடன்பாட்டுக்கான கெடு முடிந்தது, இனி நீட்டிக்கப்படாது

azmசிலாங்கூர் அரசுக்கும்  கூட்டரசு  அரசாங்கத்துக்குமிடையிலான  நீர்  உடன்பாடு  இன்றுடன் முடிவுக்கு  வருகிறது  என்றும்  அது  இனி  நீட்டிக்கப்படாது  என்றும்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  கூறினார்.

நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசிய  அஸ்மின்,  கூட்டரசு  அரசாங்கம்  “உடன்பாட்டின்  நிபந்தனைகளை  மீறி  விட்டதாக”வும்  அதனால்  மாநில  அரசுக்கு  வேறு  வழியில்லாமல்  போய்விட்டது  என்றும்  சொன்னார்.

சிலாங்கூர்  அரசின்  முடிவால் லங்காட் 2  நீர்  சுத்திகரிப்பு  ஆலை கட்டும்  கூட்டரசு  அரசாங்கத்தின் திட்டம்  பாதிக்கப்படும்.

“நான் செப்டம்பரில்  பதவியேற்றபோது  உடன்பாட்டை மதிப்பதாகக்  கூறினேன், ஆனால்  அவர்கள்  அதை  மதிக்கவில்லை”, என்றார்  அஸ்மின்.

உடன்பாட்டின்படி  அதில்  உள்ள  நிபந்தனைகளை  நிறைவேற்ற  கூட்டரசு  அரசாங்கத்துக்கு  மூன்று  மாதங்கள்  அவகாசம்  கொடுக்கப்பட்டது  ஆனால் அவை  நிறைவேற்றப்படவில்லை.

அதன்  பின்னர்  புத்ரா ஜெயா,  அடுத்தடுத்து  இரண்டு  தடவை  ஒரு-மாத  நீட்டிப்பைக்  கோரியது. இரண்டாவது  நீட்டிப்பு இன்றுடன்  முடிவுக்கு  வந்தது.

மூன்றாவது  நீட்டிப்பை  வழங்க  சிலாங்கூர் தயாராக  இல்லை.

மேற்கொண்டு   என்ன  செய்வதாக  உத்தேசம்  என்று  கேட்டதற்கு,  கூட்டரசு  அரசாங்கத்தின்  அடுத்த நடவடிக்கைக்காகக்  காத்திருப்பதாக  அஸ்மின்  கூறினார்.