‘ஐஜிபி நீதிமன்றத்தை அவமதிக்கிறார்’,வழக்குரைஞர்

paulsenஇன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்  போலீஸ்,  காலிட்  அபு  பக்கார்,  2012  அமைதிப்  பேரணிச்  சட்டம்  பகுதி 9(5)-ஐ  அமல்படுத்துவதன்வழி  நீதிமன்றத்தை  அவமதிக்கிறார்  என  வழக்குரைஞர்  எரிக்  பால்சன்  கூறினார்.

அச்சட்டம்  அரசமைப்புக்கு  விரோதமானது  என மேல்முறையீட்டு  நீதிமன்றம்  கடந்த  ஆண்டு  தீர்ப்பளித்துள்ளதாகவும்  எனவே  அது  செல்லாது  எனவும்  சுதந்திரத்துக்குப் போராடும்  வழக்குரைஞர்கள்  அமைப்பின்  இயக்குனரான  பால்சன்  குறிப்பிட்டார்.

“அவர் (காலிட்)  விருப்பப்படி  ஒரு சட்டத்தைப்  பொறுக்கி எடுத்து  அமல்படுத்த  முடியாது. முறையீட்டு  நீதிமன்றத்  தீர்ப்பை  நிறுத்தி வைக்கும்  நீதிமன்ற  ஆணைகூட  கிடையாது.

“அவர் நீதிமன்றத்தை  அவமதிக்கிறார்  என்பது  தெளிவு”, என  பால்சன்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

நேற்று,  காலிட்,  முறையீட்டு  நீதிமன்றத்  தீர்ப்புக்கு  எதிராக  மேல்முறையீடு  செய்யப்படுவதாகவும்  அதனால்  அமைதிப்  பேரணிச்  சட்டம்  பகுதி 9(5)  சட்டப்படி  செல்லத்தக்கதே  என்றும்  கூறி  யிருந்தார்.