‘பழனிவேலின் காணொளியால்’ பரபரப்பு

palani vமஇகாவில்  பல குளறுபடிகள்  நிகழ்ந்துவரும்  வேளையில், சமூக  வலைத்தளங்களில்  உலவி  வரும்  பழனிவேலின்  காணொளி ஒன்று  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

3:16 நிமிடம் ஓடும்  அந்தக் காணொளியில்  இருப்பது  மஇகா  தலைவர்தானா என்பதை  உறுதிப்படுத்த  இயலவில்லை.

அக்காணொளியில்  பேசும்  அந்த  மனிதர்,  அவருக்கு  பிகேஆருடன்  நெருக்கமான  உறவு  இருப்பதாகக்  கூறுகிறார். 13வது பொதுத்  தேர்தலில் இந்தியர்கள்  தம்மைக்  காலை  வாறிவிட்டதாகவும் . அதன்  விளைவாகக்   குறுகிய  பெரும்பான்மையிலேயே  வெற்றி  பெற  முடிந்ததாகவும்    கூறுகிறார்.

கடந்த  பொதுத்  தேர்தலில் பழனிவேல்  462 வாக்குகள்  பெரும்பான்மையில்தான்  வென்றார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

அக்காணொளியில்,  அண்மையில்  கொண்டாடப்பட்ட  பிறந்த நாள் விழாவுக்கு  பிகேஆர்  “தளபதிகள்”தான் பெரும்  கூட்டத்தைத்  திரட்டி  வந்தததாகவும்  அம்மனிதர்  கூறுகிறார்.

“அவர்களின்  நிழல்படங்களை  எல்லாம்  காண்பிக்க  முடியும். எனக்கும்  பிகேஆருக்கும் அவ்வளவு  நெருக்கம்.

“அவர்கள்தான்  கூட்டத்தை (பிறந்த நாளுக்கு)  அழைத்து   வந்தனர்.  என்னைச்  சேர்ந்தவர்களால்  அதைச்  செய்ய  முடியாது”, என்கிறார்.

காணொளி  தொடர்பில்  உடனடியாக எதிர்வினை ஆற்றியுள்ள  கெப்போங்  மஇகா  தொகுதித்  தலைவர்  எஸ்.வேள்பாரி, கட்சித்  தலைவர்  போலீசில்  புகார்  செய்ய வேண்டும்  என்றார்.

“பழனிவேல்  அக்காணொளி  ஜோடிக்கப்பட்ட  ஒன்று  என  நினைத்தால்  போலீஸில்  புகார்  செய்ய  வேண்டும்.

“ஆனால், அது  மட்டும்  உண்மையாக  இருந்தால்  விவகாரம்  மோசமாகும். மஇகா  பல  கேள்விகளுக்கு  விடையளிக்க  வேண்டியிருக்கும்”,  என  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.