அன்வாரின் உரையை நுருல் அவரது சொந்த உரையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்

 

Nuruladoptsspeechபெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவருமான அன்வார் இப்ராகிமின் உரையை பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா நாடாளுமன்ற மக்களவையில் வாசிப்பதற்கு மக்களவை இன்று தடை விதித்தது.

எதிரணித் தலைவருடைய உரையின் ஒரு பகுதியை நூருல் இஸ்ஸா அவரது சொந்த உரையாக எடுத்துக்கொள்ளலாம் என்று மக்களவை துணைத் தலைவர் ரோனல்ட் கியாண்டி கூறினார்.

“நீர் ஆற்றிய உரை உமது சொந்த உரையாகும், எதிரணைத் தலைவருடையது அல்ல”, என்று கியாண்டி கூறினார்.

நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வமான ஹான்சார்ட் பதிப்பில் அந்த உரை நுருல் இஸ்ஸாவின் உரை என்று பதிவு செய்யப்படும் என்றாரவர்.

இருப்பினும், அன்வாரின் உரையை நுருல் இஸ்ஸா தன்மையிடத்தில், அன்வார் வாசிப்பதைப் போன்றே, வாசித்தார்.

தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட போலீயான குற்றச்சாட்டில் தாம் குற்றவாளி அல்ல. குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என்ற அன்வாரின் உரையை நூருல் வாசித்தார்.

சிறைதண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் அரசு தரப்பு வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா தம்மை தொடர்ந்து தாக்கி வருவது பற்றி அவரது உரையில் அன்வார் கேள்வி எழுப்பினார்.

“இது நீதிபரிபாலன அமைவுமுறையின் நெறிமுறைக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது இல்லையா?”, என்று அன்வார் அவரது உரையில் கூறியிருந்ததை நூருல் வாசித்தார்.

“நீதிபரிபாலன அமைவுமுறையை களங்கப்படுத்தும் இந்தப் பழிவாங்குதலை அனுமதிக்கலாமா?”, என்று அன்வார் எழுப்பிய கேள்வியை நூருல் தொடர்ந்து வாசித்தார்.

ஷாபிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து அன்வார் குடும்பத்தினர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நூருல் இஸ்ஸா கூறினார்.

அரச மன்னிப்பு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான முடிவு தெரியும் வரையில் காத்திருக்கப் போவதாக நூருல் மேலும் கூறினார்.