பெற்றோர்களின் முன் அனுமதியில்லாமல் சபா மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது செல்லாது

 

kula-280x300ஒரு 16 வயது மாணவி இஸ்லாம் மதத்திற்கு அவரது கிறிஸ்துவ பெற்றோர்களின் முன் அனுமதி இல்லாமல் மாற்றப்பட்டது சட்டப்படி செல்லுபடியாகாது  என வழக்குரைஞர்  மு. குலசேகரன் கூறினார்.

“மாணவியின்  மதமாற்றம் பெற்றோர்களின் சம்மதத்துடன் மட்டுமே முடியும்”,  என அவர் மேலும் கூறினார்.
பாலர் பள்ளி  ஆசிரியையான இந்திராதேவியின் வழக்கை சுட்டிக்காட்டிய  குலசேகரன் ,அந்த வழக்கில்  சிவில் நீதிமன்றம் அவருடைய முன்னாள் கணவர் ரிதுவான் அப்துல்லா அவரது பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக  இஸ்லாத்திற்கு  மாற்றியது செல்லாது என்று  தீர்ப்பு  வழங்கியிருக்கிறது என்றார்.

ஆகவே, சபா மாணவியின் பெற்றோர்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகி, தங்களுடைய மகளின் மத மாற்றுச் சான்றிதழ் செல்லாது என்று  அறிவிக்கக் கோரி மனு செய்யலாம் என்று குலசேகரன்  கூறினார்.

சபாவின் இஸ்லாமியச் சட்டத்தின்  படி 18 வயதிற்கு  மேற்பட்டவர்களே இஸ்லாத்திற்கு  மதம் மாறும் முடிவை சுயமாக எடுக்க முடியும்.

அச்சட்டம் 18  வயதிற்கும் குறைந்தவர்கள் பெற்றோர்களின் அனுமதியின்றி இஸ்லாத்தில் சேர முடியாது என்று  தெளிவாகக் கூறியிருக்கிறது. கிறிஸ்துவராக பிறப்பிலிருந்தே வளர்க்கப்பட்ட அம்மாணவி பின்னாளில் தாம் பயின்ற பள்ளியின் தவறான பிரச்சாரத்தால் ஈர்க்கப்படு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார்.

அம்மாணவி தன் சுய விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாத்திற்கு மாறினார் என்று அப்பள்ளி ஆசிரியர்  ஒருவர்  கூறியுள்ளார். இவ்வாசிரியர்தான் அப்பெண்ணின் மதமாற்றத்திற்கு காரணாமானவர்  என நம்பப்படும் வேளையில் அவரை சபா மாநிலத்திலுள்ள வேறு ஒரு பள்ளிக்கு எந்த ஒரு  விசாரணையும் இன்றி மாற்றியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டரசு அரசியலைமைப்புச் சட்டப்படி  18 வயதுக்கும் குறைந்த ஒருவர் மதம் மாறவேண்டுமென்றால் அதற்கு பெற்றோர்கள்  சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாணவி மதம் மாறுவதற்கு முன்பு  18 வயதிற்கும் குறைந்தவர் என்பதனால் ஷரியா நீதிமன்றம் அவரை  கட்டுப் படுத்த முடியாது என  ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய  குலசேகரன் கூறினார்.

நியாய சிந்தனை உள்ள எந்த ஒரு மலேசியரும் அந்த மாணவி தானாகவே முன் வந்து இஸ்லாத்திற்கு மாறினார்  என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

மாநில கல்வித்துறை  இது ஒரு பிரச்சனை அல்ல என்று பாசாங்கு செய்வதை விடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து  அவர்  மீது ஒழுங்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குலசேகரன் வலியுறுத்திக் கூறினார்.