ரிங்கிட்டின் பலவீனத்தால் 1எம்டிபி கடன் மேலும் பெரிதாகலாம்

loan1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி),  இவ்வாண்டு  தொடங்கியதிலிருந்து   ரிம2 பில்லியனுக்கு  மேற்பட்ட  அதன்  கடனைத்  திருப்பிச்  செலுத்தி இருக்கலாம்.  ஆனால்,  அதன்  கடன்கள்  பெரும்பாலும்  அமெரிக்க  டாலரில்  இருப்பதால்  கடன்தொகை  மேலும்  பெருகும்  சாத்தியம்தான்  உண்டு  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா.

டாலருக்கு  எதிராக  ரிங்கிட்டின்  மதிப்பு குறைந்துகொண்டு  வருவதால்  1எம்டிபியின்  கடன்  கிட்டத்தட்ட  ரிம50 பில்லியனாக  இருக்கலாம்  என்றவர்  மதிப்பிடுகிறார்.

1எம்டிபி,  இருக்கும்  கடன்கள்  போக,  கூடுதல்  கடன்களையும்  பெற்று வருவதாகவும்  ஓர்  அறிக்கையில்  புவா  சுட்டிக்காட்டினார்.

2014-இல்  வெளியிடப்பட்ட  அதன்  நிதி  அறிக்கையில், 1எம்டிபி-இன்  மொத்த கடன்  ரிம42 பில்லியன்  எனக்  கூறப்பட்டிருந்தது. அதில்  ரிம22.25 பில்லியன்  டாலரில்  செலுத்தப்பட  வேண்டிய  கடனாகும்.

அந்நிறுவனம்  கடன்  வாங்கிய  நேரத்தில்  டாலருக்கு  எதிராக  ரிங்கிட்டின்  மதிப்பு  ரிம3.26 ஆக  இருந்தது. இப்போது  ரிம3.69.

கடன் தொகை இப்படிப்  பல்கிப்  பெருகுவதால்,  1எம்டிபி  அதன்  எரிபொருள்  நிறுவனங்களைப்  பங்குச்  சந்தையில்  இடம்பெறச்  செய்வதன்வழியாகக்  கூட  நிறுவனத்தை  மீட்டெடுக்க  போதுமான  பணத்தைத்  திரட்டும்  சாத்தியமில்லை  என  புவா  கூறினார்.