மகாதிர்: 14 ஆவது பொதுத்தேர்தலில் 1எம்டிபியும் ரோஸ்மாவும் பிஎன்னை மூழ்கடிப்பர்

 

Roasmatorpedoதீவிரமாகப் பேசப்பட்டு வரும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் (1எம்டிபி) மற்றும் பிரதமர் நஜிப்பின் துணைவியாரான ரோஸ்மாவின் வாழ்க்கை முறை அடுத்த பொதுத்தேர்தலில் பிஎன்னுக்கு பேரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

அம்னோ-தொடர்புடைய வலைத்தள பதிவாளர் ஷாபுடின் ஹுசின் இதனைக் கூறினார். நேற்று அவர் இவ்விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டுடன் ஒரு சந்திப்பில் பேசியதாக தெரிவித்தார். வேறு எவரும் அவருடன் இருந்தனரா என்பது தெரியவில்லை.

இன்று அவருடைய வலைதளத்தில் மகாதிருடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பேசிய விவகாரங்களில் சிலவற்றை ஷாபுடன் பதிவு செய்துள்ளார்.

“தற்போது நடந்து கொண்டிருக்கும் 1எம்டிபி பிரச்சனை மற்றும் ரோஸ்மா சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மக்கள் பிஎன்னையும் அரசாங்கத்தையும் அடுத்த பொதுத்தேர்தலில் நிராகரிப்பதற்கான காரணங்களாக இருக்கும் என்று மகாதிர் கருதுகிறார்.

“அது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கட்டத்தை எட்டியுள்ளது”, என்றாரவர்.

பிரதமருக்கு ஆதரவு இல்லை

பிரதமர் நஜிப்பை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மகாதிர் மீண்டும் மீண்டும் கூறியதாகவும், தாம் இனிமேலும் பிரதமரை ஆதரிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்றும் ஷாபுடின் எழுதியுள்ளார்.

“அவர் (மகாதிர்) நஜிப்பை ஒரு பலவீனமான தலைவர் என்று மட்டும் கருதவில்லை. அவர்தான் பெரும்பாலும் பிஎன்னை அடுத்தப் பொதுத்தேர்தலில் தோல்விக்கு இட்டுச் செல்பவராக இருப்பார்.

“அவர் அரசாங்க நிதியை கட்சிக்காக செலவிடும் நஜிப்பின் நடவடிக்கைகளை குறைகூறியதோடு அவ்வாறு செய்வது தவறு, ஏற்றுக்கொள்ள முடியாததாகும்”, என்றார்.

தாம் மகாதிருடன் இதர தலைவர்களைப் பற்றி பேசியதாகவும், அவர்களில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மற்றும் அம்னோ உதவித் தலைவர்களான அஹமட் ஸாகிட் ஹமிடி மற்றும் ஹிசாமுடின் ஹுசேன் ஆகியோரும் அடங்குவர் என்று ஷாபுடின் எழுதியுள்ளார்.

அவர் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. சரியான நேரத்தில் அது செய்யப்படலாம் என்றாரவர்.

நஜிப்பின் சொத்து மற்றும் 1எம்டிபி ஆகியவை பற்றி மகாதிரின் சொந்த வலைதளத்தில் அவர் கடுமையாக விமர்சித்திருந்தது பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குள் ஷாபுடினின் பதிவும் வெளியாயிற்று.