‘வலுக்கட்டாயமாக நஜிப்பை வெளியேற்றுவது ஒன்றே வழி’

kadபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  போக்கை  மாற்றிக்கொள்வார்  அல்லது  அவருக்கு  முன்னிருந்த  அப்துல்லா  அஹ்மட்  படாவியைப்போல்  தாமே  பதவி  விலகுவார்  என்று  டாக்டர் மகாதிர்  முகம்மட்டும்  மற்ற  அம்னோ  மூத்த  உறுப்பினர்களும்  நினைத்தால்  ஏமாந்துதான்  போவார்கள்.

இவ்வாறு கூறும்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின், அவரைக்  கட்டாயப்படுத்திப்  பதவி இறக்குவதே  ஒரே  வழி  என்கிறார்.

“மகாதிர், தெங்கு ரசாலி ஹம்ஸா, டயிம்  சைனுடின்  ஆகியோரும்  அவர்களைப்போல்  நினைப்போரும்  ஏமாந்துதான்  போவார்கள். இப்படிச்  சொல்வதற்கு  மன்னிக்கவும். நஜிப்  மாறவும்  மாட்டார், பதவி விலகவும்  மாட்டார்.

“1மலேசியா   மேம்பாட்டு  நிறுவனம், பெம்பாங்குனான்  பிஎப்ஐ  சென். பெர்ஹாட், எஸ்ஆர்சி இண்டர்நேசனல்  சென்.பெர்ஹாட்,  சிருல்  உமர் ஆஸ்திரேலியாவுக்குத்  தப்பியோடியது  போன்ற  விவகாரங்களை வைத்துதான்  நஜிப்பைப்  பதவி இறங்கக் கட்டாயப்படுத்த  முடியும்”, என்று  அவர்  தம்  வலைப்பதிவில்  கூறினார்.

நஜிப்பை  அம்னோ  உச்ச மன்றத்தின்வழி  பதவி  விலக  வைக்கலாம்  என்றால்  அதுவும்  முடியாது.  ஏனென்றால், கட்சித்  தலைவர்  அதையும்  தம்  இருக்கமான  பிடியில்  வைத்திருக்கிறார்.

அதில்  உள்ள   “அவரின்  துதிபாடிகள்”  நஜிப்புக்குத்   துதி  பாடுவார்களே  தவிர  நேர்மையாக  நடந்துகொள்ள  மாட்டார்கள்.

“நஜிப்பைக்  குறைகூறுவோரும், எதிர்ப்பவர்களும்  அப்துல்லாவைப்போல்  நஜிப்பை அகற்றுவது  எளிதல்ல  என்பதை  ஒபுக்கொள்ளத்தான்  வேண்டும்”, என  காடிர்  கூறினார்.

1எம்டிபி-யும் சர்ச்சைக்குரிய  வேறு  பல  விவகாரங்களும்  இருந்தாலும்கூட   அம்னோவில்  நஜிப்பின்  நிலை  மேலோங்கியே  நிற்கிறது. மார்ச் 8-இல்  அடிநிலை  தலைவர்கள்  ஒன்று  திரண்டு  அவருக்கு  ஆதரவு  தெரிவித்ததே  அதற்குத்  தக்க  சான்று.