ஹாடி நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவர முயல்வார்

hadiகிளந்தானில்  ஹுடுட்  சட்டத்தை  அமலாக்க  பாஸ்  மின்னல்  வேகத்தில்  செயல்பட்டு  வருகிறது.  அதன்  அமலாக்கத்துக்கு நாடாளுமன்றத்தின்  ஒப்புதல்  தேவை என்பதால்  நடப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்திலேயே  அந்த ஒப்புதலைப்  பெற  அது  முழுமூச்சாகக்  களம்  இறங்கியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு  அது  எழுதிய  கடிதமே  இதற்குச்  சான்று.

நேற்று  கிளந்தான்  சட்டமன்றத்தில்  1993  ஷியாரியா  குற்றவியல்  சட்டத்தில் தேவையான  திருத்தங்கள்  செய்யப்பட்டதை  அடுத்து  இக்கடிதம்  எழுதப்பட்டது.

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  நாடாளுமன்ற  செயலாளர்  ரோஸ்மி  ஹம்சாவுக்கு  எழுதிய  அக்கடிதம்- சமூக  வலைத்தளங்களிலும்  அது வலம்  வந்து கொண்டிருக்கிறது-   நாடாளுமன்றத்தில்  தனி  உறுப்பினர்  சட்டவரைவு கொண்டுவருவது  பற்றிக்  குறிப்பிட்டுள்ளது.

அந்தத்  தனி  உறுப்பினர்  சட்டவரைவு  1965 ஆம்  ஆண்டு ஷியாரியா  நீதிமன்றச்  சட்டத்தில்  திருத்தங்களைக்  கொண்டுவரும்  நோக்கம்  கொண்டது. நடப்பு  ஷியாரியா  சட்டம் மூன்றாண்டுக்குமேல்  போகாத சிறைத்தண்டனை,  ரிம5,000 வரைக்குமான  அபராதம், சில  குற்றங்களுக்கு  ஆறு  பிரம்படிகள்  எனத்  தண்டனைகளுக்கு  வரம்பு  கட்டுகின்றது.

திருத்தங்கள்  கொண்டுவந்து  இந்த  வரம்புகளை நீக்கினால்  இப்போது  கிளந்தானில்  கொண்டுவரப்பட்டுள்ள  ஹுடுட்  சட்டப்படி  தண்டனை  அளிக்க முடியும். கல்லெறிந்து கொல்லுதல், 80 சவுக்கடிகள்  முதலியவை  இதில்  அடங்கும்.

நடப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்திலேயே  தனி  உறுப்பினர்  சட்டவரைவைத்  தாக்கல்  செய்ய  முடியும் என  கிளந்தான் ஷியாரியா  குற்றவியல்  சட்ட நிரந்தர  செயலகத்  தலைவர்  தகியுடின்  ஹசான்  நம்பிக்கை  கொண்டிருப்பதாக  இன்றைய  ஹராகாடெய்லியின்  செய்தியறிக்கை  ஒன்று  கூறியது.