அம்னோ உள்சண்டைக்கு மக்கள் கொடுக்கும் விலை- கட்டண உயர்வு

fareஅம்னோவில்   உள்சண்டையாம். அதுதான்  போக்குவரத்துக் கட்டண  உயர்வுக்குக்  காரணமாம். எது  எப்படியோ  இதனால் பாதிக்கப்படுவது  சாதாரண  மக்கள்தான்  என  என்ஜிஓ-வான  ஜெரிட்  அங்கலாய்க்கிறது.

“சில  அம்னோ  உறுப்பினர்கள், கட்டண  உயர்வு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்   பதவி  இறக்க  நடக்கும்  ஓர் அரசியல்  சதி  என்றுகூட  சொல்லியிருக்கிறார்கள்.

“இது  எப்படிப்பட்ட  அரசியலாகவும்  இருக்கட்டும். இதனால்  பாதிக்கப்படுவோர்  சாதாரண  குடிமக்கள்தான்”, என  ஜெரிட்  ஒருங்கிணைப்பாளர்  எம்.நளினி  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

கடந்த  ஆண்டிலிருந்து  எண்ணெய்  விலை  விழ்ச்சி  கண்டு  வந்துள்ள  வேளையில்  டெக்சி, விரைவு  பேருந்து, கெரேதாஅபி  தானா  மலாயு (கேடிஎம்பி)  கட்டணங்கள்  20விழுக்காடு  கூடுவதாக  நிலப்  போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்)  அறிவித்திருப்பது  என்ன  நியாயம்  என  நளினி வினவினார்.

நேற்று, அம்னோ  இளைஞர் பிரிவு   செயல்குழு  உறுப்பினர்  இப்டில்லா  ஈஷாக்  நேரங்கெட்ட  நேரத்தில்  கட்டண  உயர்வு  அறிவிக்கப்பட்டது  அரசாங்கத்தைக்  கீழறுப்புச் செய்யும்  ஒரு  செயல்  என்று  குற்றஞ்சாட்டி  இருந்தார்.