அன்வார் பேரணிகளில் தொண்டர்கள் உண்டு தளபதிகள் எங்கே?

zamஎதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்காக  நடத்தப்படும்  பேரணிகளிலும்  மெழுகுதிரி  ஏந்தி  நடைபெறும் கூட்டங்களிலும் பக்கத்தான்  ரக்யாட்டின்  பெரும்  புள்ளிகள்  காணப்படாதது  ஏன்  என  வினவுகிறார்  முன்னாள்  தகவல் அமைச்சர்  சைனுடின்  மைடின்.

அந்நிகழ்வுகளில்  “கைக்கூலிகளும், கட்சியில்  இதற்கென்றே  உள்ள ஆள்களும், சுயசிந்தனையற்ற  மாணவர்களும்தான்”  கலந்துகொள்கிறார்கள்  என்று  சைனுடின்  அவரது  வலைப்பதிவில்  கூறினார்.

இதை  நெல்சன்  மண்டேலா  சிறை வைக்கப்பட்ட  நிகழ்வுடன்   ஒப்பிட்ட  சைனுடின்,  அந்த  ஆப்ரிக்கத்  தலைவர்களின்  நண்பர்கள்  அவருக்காகப்  போராடி  பல  ஆண்டுகள்  சிறையில்  இருந்தார்கள்  என்றார்.

“ஆனால், அன்வாருடன்  முன்னணியில்  இருந்து  போராடியவர்களைக்  காண முடிவதில்லையே.

“சுங்கை  பூலோ  சிறைச்சாலைக்கு  வெளியில்  மெழுகுதிரி  ஏந்தி  நடைபெறும்  போராட்டத்திலும்  சோகோ  விற்பனை  மையத்துக்கு  முன்புறம்  நடக்கும்  வாராந்திர  பேரணிகளிலும்  லிம்  கிட்  சியாங்  எங்கே? லிம்  குவான் எங்  எங்கே? அஸ்மின் அலி  எங்கே?  அப்துல்  ஹாடி ஆவாங்  எங்கே? முகம்மட்  சாபு  எங்கே? ஹுசாம்  மூசா  எங்கே?”, என்றவர்  வினவினார்.