என்னதான் முடிவெடுக்கப்பட்டது ஹுடுட் மீதான அமைச்சரவைக் கூட்டத்தில்?

cabinetகிளந்தானில்  கொண்டுவரப்பட்ட  ஹுடுட்  சட்டத்  திருத்தங்கள்மீது  நேற்று அமைச்சரவைக்  கூட்டமொன்று   நடந்தது. அக்கூட்டத்தில்  செய்யப்பட்ட  முடிவு  பற்றி  அம்னோ  அமைச்சர்கள்  தெரிவித்த  தகவல்கள்  ஒரு விதமாகவும்   மசீச  அமைச்சர்கள்  தெரிவித்த  தகவல்கள்  வேறு  விதமாகவும்  இருந்தன.

அம்னோ  அமைச்சர்கள்,  கிளந்தானில்  அக்கட்சியின்  பிரதிநிதிகள்  ஹுடுட்டுக்கு  அளித்த  ஆதரவை  ஏகமனதாக  வரவேற்றதாக  பெர்னாமா  செய்தி  ஒன்று  தெரிவித்தது.

“அது  அல்லாவின்  சட்டம்  என்பதால்  அது  நிறைவேற்றப்பட  வேண்டும்  என்பதை  நாங்கள்  ஏகமனதாக  ஒப்புக்கொண்டோம்.

“அல்லா  சட்டத்துக்கு  எதிர்ப்பு  என்ற  பேச்சுக்கே  இடமில்லை  ஆனால்,  அமலாக்கத்தைத்தான்  சீர்படுத்த  வேண்டும்”, என  கிராம, வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  முகம்மட் ஷாபி  அப்டால்  கூறியதாக  அது  தெரிவித்தது.

ஆனால், சின்  சியு  டெய்லியின்  செய்தி,  ஹுடுட்  விவகாரத்தில்  அமைச்சரவை  ஏகமனதான  முடிவைக்  கொண்டிருக்கவில்லை  என்பதைக்  கான்பிக்கிறது.

மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாயை மேற்கோள்  காட்டி அது  செய்தி  வெளியிட்டிருந்தது.

போக்குவரத்து  அமைச்சரான  லியோ, ஹுடுட்   கூட்டரசு  அரசமைப்புக்கு எதிரானது  என்பதால்  அமைச்சர்கள்  பலர்  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவித்ததாக  கூறினார்.

அக்கூட்டத்தில்  லியோ, ஹுடுட்டை  எதிர்க்கும்  மசீசவின்  நிலைப்பாட்டை  திரும்பவும்  வலியுறுத்தியதுடன்  அரசமைப்பை  நிலைநிறுத்த  வேண்டும்  எனவும்  கேட்டுக்கொண்டாராம்.

“கிளந்தான்  அரசாங்கத்தின்  ஹுடுட்  சட்டவரைவு  கூட்டரசு  அரசமைப்பின்  உணர்வைப்  பிரதிபலிக்கவில்லை  என்பதால்  அது  அரசமைப்புக்கு  எதிரானது  என்பதை  அமைச்சரவை  வலியுறுத்தியது”, என்று  லியோ  தெரிவித்ததாக  அந்நாளிதழ்  கூறியது.

இவ்விவகாரம்மீது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பிஎன்  சார்பில்  இன்று  ஓர்  அறிக்கை  வெளியிடுவார்  என்றும்  அது  தெரிவித்தது.