அட்னான்: பாஸின் சட்டவரைவு ஓர் ‘அரசியல் ஹுடுட்’

adnanகிளந்தான்  அரசு  ஷியாரியா சட்டத்துக்குத் திருத்தங்கள்  கொண்டுவந்து  மூன்று  நாள்கள்  ஆகின்றன  என்றாலும்,  அதன்மீது  ஆளும்  கட்சியின்  நிலைப்பாடு  என்னவென்பது தெரியாமலேயே  இருக்கிறது.   பிஎன்  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூரிடம்  கேட்டால் அக் கேள்விக்குப்  பதிலளிப்பதைத்  தட்டிக்கழிக்கிறார்.  அந்தச்  சட்டவரைவை “அரசியல்  ஹுடுட்”  என்று  மட்டும்  சொல்லி வைத்தார்.

இன்று புத்ரா  ஜெயாவில்  ஒரு  நிகழ்வில் கலந்துகொண்ட  அவரைச்  செய்தியாளர்கள்  சூழ்ந்துகொண்டு, மாநில  ஹுடுட்  சட்டத்தைச்  செயல்படுத்த  அனுமதி  கோரி  நாடாளுமன்றத்தில்  தனி  உறுப்பினர்  தாக்கல்  செய்யப்படும்போது பிஎன்னின்  நிலைப்பாடு  என்னவாக  இருக்கும்  என்று  வினவியதற்கு  பிரதமரும்  பிஎன்  தலைவருமான  நஜிப்  அப்துல்  ரசாக்  அதன்  தொடர்பில்  ஒன்றிரண்டு  நாள்களில்  அதிகாரப்பூர்வ  அறிக்கை  வெளியிடுவார்   என்றார்.

ஆனாலும்,  பாஸ்  கொண்டுவரும்  சட்டவரைவு  கூட்டரசு  அரசமைப்புக்கு  ஏற்ப  இருப்பது  முக்கியமாகும்  என்பதைக்  கூட்டரசு  அமைச்சருமான  தெங்கு  அட்னான் வலியுறுத்தினார்.

பாஸின் சட்டவரைவு  அரசமைப்புக்கு  முரணானது என்று கருதுகிறாரா  என்று  வினவப்பட்டதற்கு “பாஸின்  ஹுடுட்  ஓர்  அரசியல்  ஹுடுட்”, என்று மட்டும்  அவர்  சொன்னார்.

பிஎன்  அமைச்சர்களிடம்  கிளந்தானில்  கொண்டுவரப்பட்ட ஷியாரியா  சட்டத்  திருத்தம்மீது  பிஎன்னின்  நிலைப்பாடு  என்ன  என்ற  கேள்வியை  நீட்டினால்   போதும்  நஜிப்  அறிக்கை  வெளியிடுவார்  என்று  சொல்லி நழுவி  விடுவதை  வாடிக்கையாகக்  கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்,  பிரதமரோ,  இதுவரை  அவ்விவகாரம்  பற்றி  வாயே  திறக்கவில்லை.