ஜிஎஸ்டி 80 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்

 

Antigstarrests1ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட தங்களுடைய 106 கேள்விகள்களுக்கு பதில் வேண்டும் எனக் கோரி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கூட்டரசுப் பிரதேச கஸ்டம்ஸ் வளாகத்தில் கூடி உட்கார்ந்து போராட்டம் நடத்தியவர்களில் மொத்தம் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் எதிர்ப்புக் கூட்டத்தினரின் தலைவர் எஸ். அருள்செல்வம், சோலிடேரிட்டி அனாக் மூடா மலேசியாவின் (எஸ்எஎம்எம்) பாட்ருல் ஹிசாம் ஷாரின், டிஎபியின் யங் சைபூரா ஓத்மான் மற்றும் கோலக்கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஹத்தா ஆகியோரும் அடங்குவர்.

“நாங்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தோம். அரைவேக்காட்டு பதில் கொடுத்திருந்தாலும் கூட நாங்கள் கலைந்து செல்ல உறுதி அளித்தோம்.

“ஆனால், அவர்கள் எங்களைக் கைது செய்ய முடிவு செய்தனர்”, என்று பிஎஸ்எம்மின் தலைமைச் செயலாளருமான அருள்செல்வம் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அவர்கள் ஜிஎஸ்டி எதிர்ப்பு சுலோகங்களை முழங்கினர்.

கைது செய்யப்பட்டவர்கள் முதலில் அருகிலுள்ள ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இப்போது அவர்கள் கிளானா ஜெயா போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

“இப்போது மணி 5.00. கஸ்டம் அலுவலகம் மூடப்பட்டு விட்டது. இந்த இடத்தை விட்டு கலைந்து செல்ல நான் உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் தருகிறேன். இல்லையேல், நான் உங்களை அகற்றுவேன்”, என்று பெட்டாலிங் ஜெயா ஒசிபிடி அஸ்மி அபு காசிம் எச்சரிக்கை விடுத்தார்.

Antigstarrests2அங்கு கூடியிருந்தவர்களின் திட்டம் ஒவ்வொருவரும் ஒரு கேள்வியை அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி தகவல் மையத்திடம் எழுப்புவதாகும்.

முன்னதாக, அந்த வளாகத்தினுள் சென்றவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக 60 கலகத் தடுப்புப் படையினர் தங்களுடைய ஆயுதங்களுடன் வந்திறங்னர்.

இதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தினர் அங்கேயே இரவு வரையில் தங்கியிருக்க முடிவெடுத்து கஸ்டம் இலாகாவின் பதிலை எதிர்பார்த்து நின்றனர்.

போலீசாரும் கூட்டத்தினருடன் பேசுவதற்காக கோலாலம்பூர் கஸ்டம்ஸ் இயக்குனர் அப்துல் கனி ஓத்மானை அழைத்துவருவதாக உறுதி அளித்தனர்.

பிற்பகல் மணி 1.30 அளவில், அப்துல் கனி வந்தார். ஆனால், அவர் இரு கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறினார்.

பின்னர், அவரிடம் கேள்விகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட அவர் அங்கிருந்து கிளம்பினார்.

இங்கிருந்து பதில் அளிக்க முடியாது, ஆனால் எழுத்து மூலமாக பதில் அளிப்பதாக கூறினார். அங்கிருந்த கூட்டத்தினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

 

சாடினுக்கு ஜிஎஸ்டி, லோப்ஸ்டருக்கு ஜிஎஸ்டி இல்லை

 

Antigstarrests3ஜிஎஸ்டியை அமல்படுத்த கஸ்டம்ஸ் இலாகா தயாராக இருக்கிறதா என்ற முதல் கேள்விக்கு, ஆம் என்று அவர் பதில் அளித்தார்.

இரண்டாவது கேள்வி: மீன் டின்னுக்கு ஜிஎஸ்டி வரி. பெரிய இறாலுக்கு (லோப்ஸ்டர்) ஏன் ஜிஎஸ்டி வரி இல்லை?

“நாடாளுமன்ற உத்தரவு. நான் அமல்படுத்துகிறேன்”, என்றாரவர்.

மூன்றாவது கேள்வி: விற்பனை மற்றும் சேவைகள் வரிக்கு மாற்றாக ஜிஎஸ்டி வருவதால் பொருள்களின் விலைகள் வீழ்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது விலை குறைப்பு ஏற்படும் ?

இக்கேள்விக்கு அப்துல் கனி பதில் அளிக்கவில்லை.