போலீசார் அவர்களின் விசாரணைகளை விரைவாக நடத்தி 24-மணி நேரத்தில் முடித்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியம்- குறிப்பாக எதிரணியினரையும் சமூக ஆர்வலர்களையும் பல நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்க வேண்டிய அவசியமிருக்காது என பிகேஆர் இளைஞர் பிரிவு கூறுகிறது.
இதற்கு ஏற்ப போலீசின் நிலையான நடைமுறைகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர் பாஹ்மி பாட்சில் நேற்று கூறினார்.
இந்த மாற்றங்கள் விசாரணை செம்மையாக நடைபெற வகை செய்யக்கூடும். இதில் தொலைபேசிவழி நேர்காணல் காண்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். “விசாரணை அதிகாரியும்(ஐஓ) விசாரணையை விரைவாக நடத்த போலீஸ் நிலையத்தில் இருக்க வேண்டும்”, என்றாரவர்.
பக்கத்தான் ரக்யாட் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
“கைது செய்யப்பட்டவர்கள் ஐஓ வந்து விசாரணையைத் தொடங்குவதற்குப் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது”, என்றவர் கூறினார்.