பொருள், சேவை வரி தொடர்பில் 106-கேள்விகளுடன் சிலாங்கூர் கிளானா ஜெயாவில் உள்ள சுங்கத்துறை வளாத்தை முற்றுகையிட்ட சமூக ஆர்வலர்களில் 80பேரை போலீஸ் கைது செய்ததை அடுத்து அரச மலேசிய சுங்கத் துறை கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிக்க முன்வந்துள்ளது.
“அக் கேள்விகளுக்குப் பதிலளிப்போம்.
“முடிந்த விரைவில் எல்லாக் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களுடன் சுங்கத் துறை இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்”, எனச் சுங்கத் துறை தலைமை இயக்குனர் கசாலி அஹ்மட் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர்களின் கேள்விகளில் சில “எளிமையானவை, மிகவும் சாதாரணமானவை”, என்றாரவர்.
“எடுத்துக்காட்டுக்கு, ஜிஎஸ்டி வந்த பிறகும் விற்பனை, சேவை வரி (எஸ்எஸ்டி) தொடருமா என்பது ஒரு கேள்வி. இதை ஏன் கேட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
“எஸ்எஸ்டிக்குப் பதிலாகத்தான் ஜிஎஸ்டி வருகிறது என்பதைப் பல தடவை விளக்கியிருக்கிறோம்”, என்றாரவர்.
எதுவாக இருந்தாலும், எல்லாக் கேள்விகளுக்கும் சுங்கத் துறை பதிலளிக்கும் என்று கூறிய கசாலி, இணையத் தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்கள் சமூக ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பயன்படும் என்றார்.