போலீஸ், நேற்றிரவு நடைபெற்ற உள்ளமர்வுப் போராட்டத்தில் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்துத்தான் சமூக ஆர்வலர்களைக் கைது செய்ததாகக் கூறுகிறது.
அச்சம்பவத்தைக் கண்ட பின்னரே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அறுவரைப் போலீஸ் கைது செய்ததாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் சைனோல் சமா செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
ஆனால், கித்தா லவான் சமூக ஆர்வலர்கள் போலீஸ் பொய் சொல்வதாக ஓர் அறிக்கையில் குற்றம் சாட்டினர்.
“டட்டாரான் மெர்டேகாவில் அமைதியாக உள்ளமர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எங்கள் இளைஞர்கள் டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதை கித்தா லவான் செயலகம் மறுக்கிறது.
“பார்வையாளர்கள் பதிவுசெய்த காணொளிகள் போலீஸ்தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதைக் காண்பிக்கின்றன. அவர்கள்தாம் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்தார்கள், பிடித்து இழுத்தார்கள்”, என்று அவ்வறிக்கை கூறிற்று.
கைது செய்யப்பட்ட அறுவர் வருமாறு: சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங், தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லி காங், சமூக ஆர்வலர்கள் மைக்கல் தமிழ், கான் ஜி மாவ், சீ சூ சாங், யோங் மிங் சோங்.