பத்திரிகைச் சுதந்திரத்துக்காக போராடும் அமைப்பான சுதந்திர இதழியல் மையம் (சிஐஜே), த மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) மீது போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையை வெட்கக்கேடானது என்று வருணித்ததுடன் கைது செய்யப்பட்ட செய்தியாசிரியர்கள் மூவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆட்சியாளர் மாநாடு பற்றித் தப்பான செய்தியை வெளியிட்டதற்காக டிஎம்ஐ-இன் மூத்த செய்தியாசிரியர்கள் மூவர்- லயோனல் மொராய்ஸ், அமின் ஷா இஸ்கண்டர், சுல்கிப்ளி சூலோங்- நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களையும் சேர்த்து இதுவரை கைதான சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.
“மலேசியாவில் கருத்துச் சொல்லும் உரிமை தரம்தாழ்ந்து வருவதைத்தான் இந்த அதிரடிச் சோதனைகளும் கைதுகளும் காண்பிக்கின்றன.
“சட்டம் இந்த வகையில் பயன்படுத்தப்படுவதைக் காண சங்கடமாகவும் இருக்கிறது, அச்சமாகவும் இருக்கிறது”, என சிஐஜே இயக்குனர்கள் சோனியா ரந்தாவா-வும் ஜேக் கீ-யும் கூறினர்.
செய்தியாசிரியர்களைக் கைது செய்யாமலேயே போலீசார் விசாரணையை நடத்தியிருக்கலாம், தேவையான தகவல்களைப் பெற்றிருக்கலாம் என்றவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, சிஐஜே-க்கு ஆதரவு தெரிவித்த தென்கிழக்காசிய பத்திரிகைக் கூட்டணி (Seapa)-இன் செயல்முறை இயக்குனர் காயத்ரி வெங்கடேஸ்வரன், செய்தி ஊடகங்கள்மீது போலீஸ் மேற்கொள்ளும் அதிரடிச் சோதனைகள் கண்டனத்துக்கு உரியவை என்று கூறினார். அவை செய்தி ஊடகங்களின் உரிமையை மீறும் செயல்களாகும்.
“ஊடகங்கள் பல்வகைப்பட்ட கருத்துகளுக்கு இடமளிக்கும் களமாகும். அதை அப்படியே பாதுகாக்க வேண்டுமே தவிர குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கூடாது”, என்று காயத்ரி ஓர் அறிக்கையில் கூறினார்.