மலேசியாகினியை இழுத்துமூடச் சொல்லி ஆர்ப்பாட்டம்

mkiniஇன்று  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  மலேசியாகினி அலுவலகத்துக்கு அருகில் சுமார்  20 பேர்  திரண்டு அச்செய்தித்தளத்தை  இழுத்து  மூடச் சொல்லி  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

காபோங்கான்  மலாயு  பெர்சத்து  டெமி  இஸ்லாம்  அமைப்பைச்  சேர்ந்த  அவர்கள்,  அந்த  இணையத்தளம்  செய்திகளைத் திரித்துக்  கூறுவதாகவும்  மலேசியர்களைப்  பிளவுபடுத்துவதாகவும்  இளைஞர்களைக்  குழப்புவதாகவும்  குற்றம்  சுமத்தினர்.

“மலேசியாகினி செய்திகளைத்  திரித்து கூறுகிறது. இதனால்  இனங்களுக்கிடையில்  பதற்ற நிலை  உருவாவதைக்  காண  நாங்கள் விரும்பவில்லை. மலேசியாகினி  ஓர்  அரசியல் கருவியாக  செயல்படுவதை  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்.

“அதிகாரிகள்  கடும்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என விரும்புகிறோம்…….அப்போதுதான்  அது  இழுத்து  மூடப்படும்”, என அந்த  அமைப்பின்  தலைவர்  அரிப்பின்  அபு  பக்கார் கூறினார்.

மலேசியாகினி  எந்தச்  செய்தியைத்  திரித்துக்  கூறியது  எனச்  செய்தியாளர்கள்  அவரிடம்  வினவியதற்கு, “பல  விவகாரங்களை  இளைஞர்களைக்  குழப்புவதற்காக  அவர்கள்  திரித்துக்  கூறுகிறார்கள். உதாரணத்துக்கு  ஜிஎஸ்டி(பொருள், சேவை  வரி)”, என்றார்.

மலேசியாகினிமீது  போலீசில்  புகார்  செய்யப்போவதாகவும்  அரிப்பின்  தெரிவித்தார். ஆனால், எதைப்  பற்றிய  புகார்  என்பதை அவர்  தெரிவிக்க  மறுத்தார்.