தந்தையின் ஈமச்சடங்கில் அன்வார் கலந்து கொண்டார்

 

Anwaratfather'sfuneralசிறையிலிடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் தந்தை இன்று காலை மணி 2.00 அளவில் காலமானார் என்று பிகேஆரின் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கூறினார்.

அன்வாரின் தந்தை இப்ராகிம் அப்துல் ரஹ்மான் அம்னோ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

அவரின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள அன்வாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று வான் அஸிசா தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.

இப்ராகிமின் உடல் காஜாங், கண்ட்ரி கைட்ஸ்சிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் இன்று மாலை அடக்கம் செய்யப்படும்.

காலை மணி 10.45 அளவில் அன்வார் இப்ராகிம் காஜாங்கிலுள்ள அவரது தந்தையின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். சிறைச்சாலை காவலர்கள் பலர் அவருடன் இருந்தனர்.

இதற்கு முன்னதாக, முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அங்கு வந்து அவரது இறுதி மரியாதையச் செலுத்தினார்.

அவர் அன்வார் வந்து சேர்வதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பி விட்டார். ஆனால் அவரது துணைவியார் சித்தி ஹஸ்மா அங்கு தொடர்ந்து இருந்தார்.

அன்வாரின் தந்தையை அன்பானவர் என்று வர்ணித்த சித்தி ஹஸ்மா, “எங்களுக்கு பாக் இப்ராகிமுடன் நீண்ட கால பழக்கம் உண்டு”, என்று மலேசியாகினியிடம் கூறினார்.

அம்னோ மகளிர் பிரிவு தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில், அவரது கணவர் முகமட் சாலே இஸ்மாயில், சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சர் கோ சூ கூன், சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரிபுசார் முகமட் முகமட் தாயிப் மற்றும் ஏர்ஏசியா டோனி பெர்னாண்டிஸ் ஆகியோரும் அங்கிருந்தனர்.

அவர்களுடன் பிகேஆர் தலைவர்கள் ஜோகாரி அப்துல், என். சுரேந்திரன் மற்றும் லத்தீபா கோயா ஆகியோரும் இருந்தனர்.