ஹாடியின் ஹுடுட் சட்டவரைவுக்கு எஸ்ஐஎஸ் எதிர்ப்பு

sisஇஸ்லாத்தில்  சகோதரிகள்  அமைப்பு (எஸ்ஐஎஸ்), மாராங்  எம்பியும் பாஸ்  தலைவருமான  அப்துல்  ஹாடி  ஆவாங், ஷியாரியா  சட்டத்தில்  திருத்தம்  செய்வதற்கு   மக்களவையில்  தனி  உறுப்பினர்  சட்டவரைவைக்  கொண்டு  வருவது  ஏமாற்றமளிப்பதாகக்  கூறியுள்ளது.

அவர்  கிளந்தானில்  ஹுடுட்டை  அமல்படுத்துவதற்காக  கூட்டரசு  அரசமைப்பைப்  புறக்கணிக்கிறார், அவமதிக்கிறார்  என்று  அது  கூறிற்று.

“சட்டவரைவு  தாக்கல்  செய்யப்படுவதைக்  ஒரு  கடுமையான  விவகாரமாக  எஸ்ஐஎஸ் கருதுகிறது. அது  கூட்டரசு  அரசமைப்பின்  75, 76, 76ஏ ஆகிய  சட்டப் பகுதிகளின்  அதிகாரத்தை  மீறுகிறது.

“கூட்டரசு அரசாங்கத்துக்கும்  மாநில  அரசாங்கத்துக்குமிடையிலான  அதிகாரப்  பகிர்வையும்  அரசமைப்பே  நாட்டின்  உயர்  சட்டம்  என்பதையும்  மதிக்க  வேண்டும்  என  எல்லா  நாடாளுமன்ற  உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

“பாஸும் கிளந்தான்  அரசாங்கமும்  மாநிலத்தின்  பொருளாதார  மேம்பாட்டில் கவனம்  செலுத்த  வேண்டும்  எனவும்  வலியுறுத்துகிறோம்”, என  எஸ்ஐஎஸ்  ஓர்  அறிக்கையில்  கூறியது.