2015 பயங்கரவாதத் தடுப்புச் சட்ட(பொடா)த்தின்கீழ் விசாரணையின்றித் தடுத்து வைப்பதை மீண்டும் கொண்டு வந்திருக்கும் அரசாங்கத்தை மனித உரிமைகள் ஆணையம்(சுஹாகாம்) கடிந்து கொண்டிருக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான புத்ரா ஜெயாவின் போராட்டத்தை சுஹாகாம் ஆதரிக்கிறது ஆனால், அதன் பொருட்டு மனித உரிமைகள் பலி கொடுக்கப்படுவதை அது ஏற்கவில்லை.
“பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து தன் குடிமக்களின் அரசமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு.
“ஆனால், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகவும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்குக் கேடு செய்வதாகவும் இருத்தல் கூடாது”, என சுஹாகாம் தலைவர் ஹஸ்மி அகாம் ஓர் அறிக்கையில் கூறினார்.
பொடா எதிர்ப்பை ஒடுக்கப் பயன்படுத்தப்படாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்தாலும் அதிகார அத்துமீறல் நடக்காமல் தடுக்கப் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் அதில் இல்லை என ஹஸ்மி கூறினார்.