மகாதிருக்கு எதிராக நாடு முழுக்க போலீஸ் புகார்

sammசோலிடேரிடி அனாக்  மூடா  மலேசியா(எஸ்ஏஎம்எம்),  டாக்டர்  மகாதிர்  முகம்மட்மீது  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  விசாரணை  நடத்த  வேண்டும்  என்று  கோரி  நாடு  முழுக்க  போலீசில்  புகார்  செய்து வருகிறது.

அல்டன்துன்யா  ஷரீபு  கொலை  தொடர்பில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பற்றி  முன்னாள்  பிரதமர்  தெரிவித்துள்ள  கருத்துகள்  குறித்து  புகார்  செய்யப்படுவதாக  அந்த  என்ஜிஓ-வின் ஒருங்கிணைப்பாளர்  பட்ருல்  ஹிஷாம்  ஷரின்  கூறினார்.

“நேற்று  ரெம்பாவில்  புகார்  செய்தோம். இன்று  காலை  குவாந்தானிலும்  ஹுலு  சிலாங்கூரிலும்.

“இன்னும்  சற்று நேரம் கழித்து  பினாங்கிலும்  மலாக்காவிலும்  புகார்  செய்யப்படும்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

மங்கோலியப் பெண்  கொலை குறித்து “”Di Sebalik misteri pembunuhan Altantuya (அல்டன்துன்யாவின்  கொலையின்  பின்னேயுள்ள  மர்மம்) என்ற  நூல் எழுதியதற்காக தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  தம்மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  பட்ருல்  கூறினார்.

“நான்  நடவடிக்கையை  எதிர்நோக்கினேன்  என்கிறபோது  இதே  விவகாரத்தை  எழுப்பியதற்காக  ஏன் மகாதிரும்  நடவடிக்கையை  எதிர்நோக்கக்  கூடாது?”, என்றவர்  வினவினார்.

இதன்  தொடர்பில்  ஏற்கனவே  விளக்கமளித்துள்ள  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார், இந்த  விவகாரம்  ஏற்கனவே  எழுப்பப்பட்டு விரிவாக  விவாதிக்கப்பட்டு  வருவதால்  மகாதிர்   தேச  நிந்தனைச்  சட்டத்தை  மீறவில்லை  என்று  கூறினார்.

மகாதிரும்  தாம்  நஜிப்  குற்றச்செயல்  புரிந்ததாக  குற்றம்  சாட்டவில்லை  என்றும்  கொலைக்கு  உத்தரவிட்டது  யார்  என்ற  கேள்விக்கு விடையை மட்டுமே  தேடிக்  கொண்டிருப்பதாகவும்  கூறி  வருகிறார்.