தேர்தல் தொகுதிப் பிரிப்பில் மகாதிர் செய்த தகிடுதத்தம்: இஸ்மாயில் சப்ரி குற்றச்சாட்டு

ismailமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தேர்தல்  தொகுதிப்  பிரிப்பில்  செய்த  குழப்படிகளால்  அம்னோவால்  கூடுதல் இடங்களை  வெற்றி  பெற  முடியாமல் போனதாக  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  இஸ்மாயில்  சப்ரி  குற்றம்  சாட்டியுள்ளார்.

1999ஆம் ஆண்டு  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர்   மகாதிர்  மலாய்- பெரும்பான்மை  தொகுதிகள்  பலவற்றைப்  பல- இனங்கள்  நிறைந்த  தொகுதிகளாக  மாற்றி  அமைத்ததாக  இஸ்மாயில்  கூறினார்.

“மகாதிர்  அம்னோ  தலைவராக  இருந்தபோது (1999) அம்னோவுக்கு  மலாய்க்காரர்  ஆதரவு  குறைந்தது. அப்போது  எல்லாரும்  (பிஎன்) உறுப்புக் கட்சிகள்  கொடுத்த  ஆதரவால்தான்  பிஎன்  வென்றதாக  ஒப்புக்கொண்டார்கள்.

“அதனால்தான்  அப்போது(தேர்தலுக்குப்  பின்)  தேர்தல் தொகுதி எல்லைகளைத்  திருத்தி  அமைக்கும்  பணி  மேற்கொள்ளப்பட்டது. மலாய்- பெரும்பான்மை  தொகுதிகளின்  எண்ணிக்கை  குறைக்கப்பட்டு  அவை  பல  இனங்களைக்  கொண்ட  தொகுதிகளாக  மாற்றப்பட்டன.

“மகாதிருக்கு  அப்போது  மலாய்க்காரர்கள்மீது  நம்பிக்கை  இல்லாமல்  போய்விட்டது. அதன்  விளைவு,  இப்போது  மலாய்க்காரர்- அல்லாதாரின்  வாக்குகள்தாம் பல  இடங்களில் வெற்றியை  முடிவு  செய்கின்ற  நிலை  உள்ளது”, என  இஸ்மாயில்  சப்ரி செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

1999  பொதுத்  தேர்தலை  அடுத்து  அம்னோ  நாடாளுமன்றத்தில்  அதன்  இடங்களில்  22-ஐ இழந்தது. அக்கட்சி  திரெங்கானு  மாநிலத்தையும்  பறிகொடுத்தது.

2004 பொதுத்  தேர்தலில்  அம்னோ  மீண்டும்  எழுச்சி  பெற்று  38  இடங்களைக்  கூடுதலாக  வென்றது.

நஜிப்  அம்னோவில்  பல  மாற்றங்களைச்  செய்திருப்பதாக இஸ்மாயில்  கூறினார். அதன்  பயனாகக்  கட்சிக்கு  2013-இல்  கூடுதல்  வாக்குகள்  கிடைத்தன.