மலாய்-பெரும்பான்மை தொகுதிகள் குறைக்கப்பட்டனவா? இசி மறுக்கிறது

ecதேர்தல்  தொகுதிப் பிரிப்பில் தில்லுமுல்லுகள்  செய்து  மலாய்- பெரும்பான்மை தொகுதிகளின்  எண்ணிக்கையைக்  குறைத்ததாகக்  கூறப்படுவதைத்  தேர்தல்  ஆணைய (இசி)த்  தலைவர் அப்துல்  அசீஸ்  யூசுப்  மறுத்தார்.

அம்னோ அமைச்சர்  ஒருவர்,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவரது  ஆட்சியின்போது  தேர்தல்  தொகுதிப்  பிரிப்பில் மாற்றங்களைச்  செய்து  மலாய்காரர்கள்  பெரும்பான்மையாக  உள்ள  தொகுதிகளைக் குறைத்தார்  எனக்  குற்றம் சாட்டப்போக,  அது  ஆணையத்துக்கு  ஓர்  இக்கட்டான  நிலையை  உருவாக்கி விட, ஆணையம். இப்போது தன்னைத்  தற்காத்துக்  கொள்ள வேண்டிய  நிலையில்  உள்ளது..

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  தலைமைத்துவத்தைக்  குறை  சொல்லும்  மகாதிரைத்  தாக்குவதாக  நினைத்துக்  கொண்டுதான்  விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  அவ்வாறு  கூறினார்.

இஸ்மாயில்  கூறுவதுபோல்  மலாய்க்காரர்- பெரும்பான்மை  தொகுதிகள்  பல்லினத்  தொகுதிகளாக  மாறியதற்கு தில்லுமுல்லு   காரணமில்லை  என  அசிஸ்  கூறினார்.

வாக்காளர்கள் தொகுதிகளை மாற்றிக்  கொண்டதால்  அவ்வாறு நிகழ்ந்தது  என்றார்.

“வாக்காளர்கள் வேறொரு  தொகுதிக்கு  மாற  விரும்பினால்  அவர்கள்  அடையாள  அட்டையில்  முகவரி  மாற்றங்களைச்  செய்கிறார்கள். மாற்றத்தைத்  தேசிய  பதிவுத்துறை  ஏற்றுக்கொள்ளுமானால்  இசி  அதைத்  தடுக்க  முடியாது”, என்றாரவர்.

மேலும், இதெல்லாம்  அரசியல் கட்சிகளின்  பேச்சு.

“இசி, அரசியல்  கட்சிகளின்  விவகாரங்களில்  சம்பந்தப்பட  விரும்பவில்லை”, என்று  கூறிய  அசீஸ், தொகுதி  எல்லைகளைத்  திருத்தி  அமைக்கும்  பணி  சட்டப்படி  செய்யப்படுகிறது என்பதை  வலியுறுத்தினார்.