பொடா, சட்டங்களையும் உரிமைகளையும் மீறுகிறது

potaஏப்ரல் 7  அதிகாலை  நேரத்தில்  பயங்கரவாத  எதிர்ப்புச்  சட்டம் (பொடா) நிறைவேற்றப்பட்டது  குறித்து மலேசிய  வழக்குரைஞர்  மன்றம், சாபா  சட்டச்  சங்கம், சரவாக்  வழக்குரைஞர்  சங்கம்  ஆகியவை கவலை  கொண்டிருக்கின்றன. அத்துடன்  விசாரணையின்றித்   தடுத்து  வைக்கப்படுவதற்கும்  அவை  கடுமையான  எதிர்ப்பைத் தெரிவித்துக்  கொண்டுள்ளன.

பொடா  என்பது  1960 உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்டம் (ஐஎஸ்ஏ), 1933 நடமாட்டக் கட்டுப்பாட்டுச்  சட்டம், 1959 நாடுகடத்தல் சட்டம், 1969 அவசரகாலச்  சட்டம்(பொது ஒழுங்கு,  குற்றத் தடுப்பு) ஆகியவற்றை  உயிர்ப்பிக்கும்  முயற்சி  என்பது  தெளிவாகும்  என  அவை  தெரிவித்தன.

பொடா  ஆட்சேபணைக்குரியது, சட்ட  வழிமுறையைப்  புறக்கணிக்கிறது, நம்  அரசமைப்பு  உரிமைகளை  மீறுகிறது, சட்ட  ஆளுமையை  நிராகரிக்கிறது. பொடா  விசாரணையின்றிக்  காவலில்  வைப்பதை  மீண்டும்  வழக்கத்துக்குக்  கொண்டு  வருகிறது  என்று  அவை  கூறின.

பொடா  குறிப்பிட்ட  தரப்பினருக்கு  எதிரானது  என்று  சொல்லப்பட்டாலும் அத்தரப்பினர்  யார்  என்பதை  அது  தெளிவாகக்  குறிப்பிடவில்லை.

கம்முனிஸ்டு  ஊடுவருலுக்கு  எதிராகக்  கொண்டு  வரப்பட்ட  ஐஎஸ்ஏ  அரசியல்  எதிர்ப்புகளை  ஒடுக்கவும்  அரசியல் எதிரிகளைச்  சிறை  வைக்கவும்  பயன்படுத்தப்பட்டதை  நாம்  அறிவோம்.

பொடா  சட்டத்தின்கீழ்  ஒருவரை விசாரணைக்காக கூடின பட்சம் 60 நாள்களுக்குத்  தடுத்து  வைக்க  முடியும். காவலில்  வைப்பதற்கான  கோரிக்கையை மாஜிஸ்திரேட்டால்  மறுக்க  இயலாது. அவர்,  போலீஸ்  மற்றும்  அரசுதரப்பு வழக்குரைஞரின்  கோரிக்கையை  ஏற்கும்  வெறும்  இரப்பர்  முத்திரையாகி  விடுகிறார்.

பொடா  நீதித்துறையின்  விருப்புரிமையில்  தலையிடுகிறது  என்றும் இது  நீதித்துறையின்  அதிகாரத்தை  நிர்வாகத்துக்கு  அளிப்பதற்கு  ஒப்பாகும்.  நம்  அரசமைப்புப்படி நீதிமுறை  அதிகாரம்  நீதித்துறையிடம்தான்  இருக்க  வேண்டும்  என்பதை  அரசாங்கத்துக்கு  அவை  நினைவுபடுத்துகின்றன. நீதிமுறையின்அதிகாரத்தை  வேறு  துறைகளுக்கு  மாற்றி  விடுவது  அரசமைப்புக்கு  முரணானது.

மேலும், தடுத்து வைக்கப்படுபவருக்கு  அவர்  கைது செய்யப்பட்டதற்கான  காரணத்தைத்  தெரிவிக்க  வேண்டும்  என்ற  விதி  இல்லை, அவர்  வழக்குரைஞரை  வைத்துக்  கொள்ளலாம்  என்பதர்கும்  உத்தரவாதம்  இல்லை.

பொடா  சட்டத்தில்  நீதிமன்ற  பரிசீலனைக்கே இடமில்லை. தடுத்து  வைக்கப்படுவதற்கு எதிராகவோ  கட்டுப்பாடுகளுக்கு   எதிராகவோ  நீதிமன்றத்துக்குச்  செல்ல  இயலாது. இது  நீதித்துறையை  அவமதிக்கிறது  என்பதுடன் கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி 8-க்கும்  முரணானதாகும்.  .

உலக  அளவில்  உருவாகிவரும் பயங்கரவாத  மிரட்டலையும்   அதை  எதிர்ப்பதற்கு அரசாங்கம்  மேற்கொண்டுள்ள  முயற்சிகளையும்  அறிந்தே  இருப்பதாக  அவை  கூறின. அரசாங்க  முயற்சிகளை  அவை  ஆதரிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு  எதிரான  போரில்  வெற்றி  பெறத்தான்  வேண்டும். ஆனால், அதற்காக   சட்ட  ஆளுமையையும் மனித  உரிமைகளையும்  இயற்கை  நீதியையும்  விட்டுக்கொடுக்கக்  கூடாது.

பொடா  மேலவையில்  தாக்கல்  செய்யப்படாமல் மீட்டுக்கொள்ளப்பட  வேண்டும்  என  அவை  மூன்றும்  கேட்டுக்கொண்டன.