பல்லில்லா புலிகள்கூட அல்ல; வெறும் பூனைக்குட்டிகள்

agamபொதுக் கணக்குக்குழுவும் (பிஏசி)  மனித உரிமை  ஆணையமும்(சுஹாகாம்)  புலிபோல்  செயல்பட்டு  அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வைக்க  உருவாக்கப்பட்ட அமைப்புகள்.

ஆனால், அவை  புலிகளாகவா  இருக்கின்றன? பல்  பிடுங்கப்பட்ட  புலிகள்போல்  அல்லவா  காட்சியளிக்கின்றன.

பிஏசியும்  சுஹாகாமும்  முன்வைக்கும்  பரிந்துரைகளை   அரசாங்கம்  கவனத்தில் கொள்வது  உண்மைதான். ஆனால், அது  எல்லாமே  வெறும்  ஒப்புக்காகத்தான். அவை  சொல்லும்  எதையும்  அது  கடுமையாக  எடுத்துக்கொள்வதில்லை.

பிஏசி-இன்  கடிந்துரைகளின்மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள்   குறித்து  அரசாங்கம்  இதுவரை  அறிக்கை  எதையும்  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்ததில்லை. சுஹகாமின்  ஆண்டறிக்கைகளும்  மக்களவையில்  இதுவரை  விவாதிக்கப்பட்டதில்லை.

நேற்று  2014 சுஹாகாம்  ஆண்டறிக்கையை  ஊடகங்களுக்கு  வழங்கும்  நிகழ்வில்  பேசிய  சுஹாகாம்  தலைவர்  ஹஸ்மி  ஆகம்,  பயங்கரவாதத்  தடுப்புச் சட்டம் (பொடா)  பற்றி  ஆணையத்திடம் ஆலோசனைகூட  கலக்கப்படவில்லை  என்றார்.

மனித  உரிமைகளைப்  பாதுகாக்கப்  பொறுப்பேற்றுள்ள  அந்த  ஆணையத்துக்கு  மேலோட்டமாக ஒரு விளக்கம்  கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான்.

அதனால்தான்  ஹஸ்மி  அந்த  ஆணையம்  ஒரு  பல்லில்லாத  புலி  என்று  அங்கலாய்த்துக்  கொண்டார்போலும்.

உண்மையில், அரசாங்கம்,  சுஹாகாமையும்  பிஏசி-யையும்  கண்காணிப்பு  அமைப்புகளாகக்  கருதவில்லை வெறும்  பூனைக்குட்டிகளாகத்தான்  கருதுகிறது.