இபிஎப் பண மீட்பில் ஒரு சமரசத் திட்டம்

eptஊழியர்  சேமநிதி (இபிஎப்)  சந்தாதாரர்கள்  அவர்களின் பணத்தை 55 வயது  தொடங்கிக்  கட்டம்  கட்டமாக  மீட்டுக்கொள்ள  அனுமதிக்கலாம்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  ஒரு  சமரசத்  திட்டத்தை  முன்வைத்துள்ளார்.

பணமீட்பு  வயதை  55-இலிருந்து  60-க்கு  உயர்த்த  இபிஎப் எண்ணியிருப்பதாக  வெளிவந்த  செய்திக்கு  எதிராக  சந்தாதாரர்கள்  போர்க்கொடி  தூக்கியதை  அடுத்து  அவர்  இப்படி  ஒரு  சமரசத் திட்டத்தை  முன்வைத்தார்.

55 வயதில்  பணத்தை  மீட்டுக்கொள்ள  இடமளித்தால்  சில  ஆண்டுகளிலேயே  சேமித்த  பணத்தை  முடித்து  விடுவார்கள்  என்ற  இபிஎப்-பின் விளக்கத்தை  ஏற்றுக்கொள்வதாக  ரபிஸி  கூறினார்.

“அதைக்  கருத்தில்கொண்டு  இபிஎப்  சந்தாதாரர்கள்  55  தொடங்கி  60-வயதுவரை  கட்டம் கட்டமாக  பணத்தை  மீட்பதற்கு  அனுமதிக்கலாம்  எனப்  பரிந்துரைக்கிறேன்.

“உதாரணத்துக்கு, சந்தாதாரர்கள்  55-வயதில் 60 விழுக்காட்டுப்  பணத்தையும் மீதமுள்ள  40  விழுக்காட்டை  60-வயதிலும்  மீட்டுக்கொள்வதென  முடிவு  செய்யலாம்”, என  ரபிஸி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அல்லது 50:50 அல்லது 40:60  என்றுகூட  பணத்தை  மீட்டுக்கொள்ளலாம். அதை  அவர்களின்  விருப்புரிமைக்கு  விட்டுவிடலாம்  என்றாரவர்.