பிஎஸ்எம்: எம்பிகளுக்கு சம்பள உயர்வு, ஆனால் தொழிலாளர்களுக்கு இல்லை, ஏன்?

 

PSMmpsalaryincreaseதொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டதற்காக மலேசிய சோசலிசக் கட்சி அவர்களை இன்று வன்மையாகச் சாடியது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரிம9,500 (146 விழுக்காடு உயர்வு) சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கையில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரிம900 லிருந்து ரிம1500 க்கு அதிகரிக்க வேண்டும் என்று பிஎஸ்எம் பிரதிநிதி எஸ். தினகரன் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களின் சம்பளத்தை ரிம6508.59 லிருந்து ரிம16,000.00 க்கு உயர்த்துவதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்றியதை அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க வருமான பற்றாக்குறையைச் சரிகட்டுவதற்காக பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎச்டி) அமலாக்கப்பட்டதாக கூறும் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

“அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு அடிப்படைக் காரணம் இருக்கிறதென்றால், ஏன் அவர்கள் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தையும் உயர்த்துவதற்கான அடிப்படைக் காரணத்தை காணவில்லை?”, என்று அவர் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வினவினார்.

ஏப்ரல் 1 இல் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாரவர்.

தொழிலாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சேவைக்கும் அவர்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், வியாபாரிகளும் அவர்களுடைய பொருள்களின் விலையை அதிகரித்துள்ளனர் என்று தினகரன் தெரிவித்தார்.

 

அரசாங்கத்திடம் ஈடுபாடு இல்லை

 

தேசிய சம்பள ஆலோசனை மன்றம் சட்டம் 2011 இன்படி குறைந்தபட்ச சம்பளம் ஈராண்டிற்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்பட வேன்டும் என்பதைச் சுட்டிக் காட்டிய தினகரன், ஆகக்கடைசியான குறைந்தபட்ச சம்பள மறுஆய்வு 2013 இல் மேற்கொள்ளப்பட்டு தீபகற்ப மலேசியாவில் குறைந்தபட்ச சம்பளம் ரிம900 ஆகவும், கிழக்கு மலேசியாவில் ரிம800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இப்போது நான்கு மாதங்கள் கடந்து விட்டன. அரசாங்கமும் மன்றமும் இதுவரையில் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதற்கான எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்பதை தினகரன் சுட்டிக் காட்டினார்.

ஜெரிட் அமைப்பின் எம். சிவரஞ்சினி தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பள உயர்வில் அரசாங்கத்தின் ஈடுபாடு குறித்து கேள்வி எழுப்பினார்.

அச்செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், மார்ச் 13 இல் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் சம்பள உயர்வு அளிக்கக் கோரும் மகஜர் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் எதுவும் நடைபெறவில்லை என்றார்.

மார்ச் 12 இல், மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியட் ஜாயம் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படாது என்று நாடாளுமன்றத்தில் கூறினார். இது இதற்கு முன்னர் விடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு முரணானது என்று கூறிய அவர், தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதில் அரசாங்கம் தீவிர அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.

மே தினம் (மே 1) வருகிறது. அதனுடன் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று சிவரஞ்சினி அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.