பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மலேசிய மனித உரிமைகள் கழகம் (சுஹாகாம்) ஒப்புதல் அளித்திருந்தது என்று உள்துறை அமைச்சார் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியிருந்ததை அக்கழகம் மறுத்துள்ளது.
மாறாக, மார்ச் 12 இல் சுஹாகாம் உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. மனித உரிமைகளைப் பொறுத்தவரையில் இச்சட்ட மசோதாவில் எவ்வாறான சீர்திருத்தங்கள் கொண்டு வரலாம் என்பது பற்றி அரசுக்கு ஆலோசனை கூறுவதற்கு ஓர் வாய்ப்பு அளிக்கும்படி அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக அக்கழகம் கூறியது.
“அச்சட்டம் இயற்றுதல் பற்றி அதனுடன் ஆலோசனை நடத்தவில்லை, நடத்தப்படவும் இல்லை என்பதை ஆணையம் மீண்டும் நிலைநிறுத்துகிறது”, என்று சுஹாகாம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது.
பொடா சட்ட மசோதாவில் பல தெளிவற்ற பகுதிகள் இருக்கின்றன. இருந்த போதிலும், அது சட்டமாக்கப்பட்டது குறித்து சுஹாகாம் அதன் வருத்தத்தை தெரிவித்துள்ளது என்று சுஹாகாம் அறிக்கை மேலும் கூறுகிறது.