ஸாகிட் ஹமிடி: தேவாலயத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேசநிந்தனையானது

Crossseditiousபெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தேசநிந்தனையானது என்று தாம் கருதுவதாக உள்துறை அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார்.

இந்த விவகாரத்தில் ஸாகிட்டின் கருத்து போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கரின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

அந்த ஆர்ப்பாட்டம் தேசநிந்தனையானதா என்று செய்தியாளர்கள் இன்று அவரை கேட்ட போது, “நிச்சயமாக! ஆம், ஆம் ஆம்!” என்று ஸாகிட் பதில் அளித்தார்.

“நான் இனத்துவேஷம் அற்றவன். போலீசாரும் இனத்துவேஷமில்லாதவர்கள். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று ஸாகிட் மேலும் கூறினார்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அம்னோ உறுப்பினர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.

“நிச்சயமாக, நிச்சயமாக, நிச்சயமாக…ஏனென்றால் அவர்கள் சட்டத்தை மீறியுள்ளனர். அம்னோவில், நாங்கள் இதர சமயங்களை மதிக்க வேண்டும். அவர்கள் இதன் விளைவை (எதிர்கொள்ள வேண்டும்) என்று ஸாகிட் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னதாக இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கர் சிலுவையை அகற்றக் கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தேசநிந்தனைச் சட்டம் 1948 ஐ மீறவில்லை என்றார்.

“நாங்கள் எவ்விதமான தேசநிந்தனையும் அதில் காணவில்லை ஏனென்றால் அது சமயம் சம்பந்தப்பட்டதல்ல. அது கிறிஸ்துவ சமயத்தை சம்பந்தப்பட்டுத்த வில்லை.

“அவ்விடத்தின் குடியிருப்பாளர்கள் அந்த தேவாலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு எதிராகத்தான் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

“இந்த விவகாரத்தில் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இதனை கிறிஸ்துவ சமயம் சார்ந்த ஒன்றுடன் இணைத்து விடாதீர்”, என்று காலிட் செய்தியாளர்களிடம் கூறினார்.