புவா: 1எம்டிபியை மீட்டெடுக்க மின்கட்டணம் உயர்த்தப்படும்

tenagaகடன்  தொல்லைகளில்  சிக்கிக்  கொண்டிருக்கும்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தை  மீட்டெடுக்க  மலேசியர்கள்  மின்சாரத்துக்குக்  கூடுதல்  கட்டணம்  செலுத்துவதைத்  தவிர  வேறு  வழியில்லை  என்கிறார்  டோனி புவா.

1எம்டிபி, டெண்டர்களை  அழைக்காமல்  தனியார்  மின்  உற்பத்தி  நிறுவனங்கள்  பலவற்றுக்குக்  “கவர்ச்சிக்கரமான”  குத்தகைகளை  நேரடியாக  வழங்கி  இருப்பதுதான்  இதற்குக்  காரணமாம்.

“நேரடியாக  குத்தகைகளை  வழங்கியது,  அத்தொழிலில்  போட்டியை  ஊக்குவிக்க  திறந்த  டெண்டர்  முறை  பின்பற்றப்பட  வேண்டும்  என்ற  எரிபொருள்  ஆணையத்தின்  கோட்பாடுகளை  அப்பட்டமாக  மீறிய  செயலாகும்”, என  புவா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“1எம்டிபி  நிறுவனம்  அதன்  ரிம42 பில்லியன்  கடனைத்  தீர்ப்பதற்கு  உதவியாக  அரசாங்கம் மின் உற்பத்திக்காகக்  கவர்ச்சியான  கட்டணங்களை வழங்கும்  என்பதால்  மலேசியர்கள்  மின்சாரத்துக்குக்  கூடுதல்  கட்டணம்  செலுத்த  வேண்டியிருக்கும்  என்று  ஏற்கனவே  கூறி  இருந்தேன்”, என்றாரவர்.

ஆனால், நிலைமை  தாம்  எதிர்பார்த்ததைவிட  மோசமாகி  இருப்பதாக  அந்த  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  கூறினார். ஏனென்றால், 1எம்டிபி மின்  உற்பத்திக்காக  மின் ஆலைகளை  அமைப்பதற்கு  முன்னரே  மின்  உற்பத்திக்கான  கட்டணங்களை  அதிகரிக்க  ஒப்புக்கொண்டிருக்கிறது  என்றாரவர்.