நிக் நஸ்மி: கித்தா லவான் பேரணி நடப்பது உறுதி

nik nazபேரணி  நடத்த  அனுமதி  பெற  வேண்டும்  என்று  போலீஸ்  படைத்  தலைவர்  எச்சரித்துள்ளபோதும்   பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)க்கு  எதிரான  கித்தா  லவான்  பேரணி  நடக்கத்தான்  போகிறது.

“கித்தா லவானுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படும்  என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ் (ஐஜிபி) மிரட்டியிருப்பது  அரசமைப்புக்கு  முரணானது. அது  மே  முதல்  நாள்  ஜிஎஸ்டிக்கு  எதிரான  எங்களின்  பேரணியைத்  தடுத்து  நிறுத்தாது”, என பிகேஆர்  இளைஞர்  அணித்  தலைவர்  நிக் நஸ்மி  நிக்  மாட் ஓர்  அறிக்கையில்  கூறினார்.

ஐஜிபி  காலிட்  அபு பக்கார், அமைதியாக  ஒன்றுகூடும்  உரிமைக்கு  இடமளிக்கும்  அரசமைப்பைச்  சிறுமைப்படுத்துவதுபோல்  பேசியிருக்கிறார் என நிக்  நஸ்மி கூறினார்.

“மக்கள்  ஒன்றுகூடுவதற்கு  போலீசின்  அனுமதி  பெற  வேண்டியதில்லை என்பதையும்  அமைதிப்  பேரணிச்  சட்டத்தின் பகுதி 9(5)-இன்படி  10-நாள்  முன்னறிவிப்பு  கொடுக்க  வேண்டும்  என்ற  விதி  அரசமைப்புக்கு  விரோதமானது  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதையும் அவருக்கு  நினைவுபடுத்துகிறேன்”, என கித்தா  லவான்  இளைஞர்கள்  சார்பாக  பேசிய  நிக்  நஸ்மி  குறிப்பிட்டார்.