உதவிக்காகக் காத்திருக்கிறார்கள் நேப்பாளிகள்: மாண்டவர் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டியது

quakeநில  நடுக்கத்தால்  அதிர்ச்சி  அடைந்த  நேப்பாளிகள்  அந்நெருக்கடிக்கு  எதிராக  அரசாங்கம்  மெதுவாக  செயல்படுவதாகக்  கூறி  ஆத்திரமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை  சக்தி  வாய்ந்த  நிலநடுக்கத்தால் தாக்குண்ட  நேப்பாளத்துக்கு  இப்போதுதான்  அனைத்துலக   உதவிகள்  வரத்  தொடங்கியுள்ளன. நில  நடுக்கத்தில்  உயிரிழந்தவர்  எண்ணிக்கை  4010 என்றும்  7,598  பேர்  காயமடைந்திருப்பதாகவும் காட்மண்டுவில்  உள்துறை  அமைச்சு  அதிகாரி  ஒருவர்  தெரிவித்தார்.

கடந்த  81 ஆண்டுகளில்  ஏற்பட்ட  மிகப்  பயங்கரமான  நிலநடுக்கமான  அது  இமய மலையிலும் பெரிய  பனிச்  சரிவை  ஏற்படுத்தியது. பனிச்சரிவில்  சிக்கி  17 மலையேறிகளும்  வழிகாட்டிகளும்  உயிரிழந்தனர்.

தொடர்ந்து  ஏற்பட்ட  பின்னதிர்வுகளும், நில  நடுக்கத்தால் உண்டான  பேரழிவும், நிதிப்  பற்றாக்குறையும்  உதவி அளிப்பைத்  தாமதப்படுத்தி  வருகின்றன.

நேப்பாளத்துக்கு  முதலில்  சென்ற வெளிநாட்டு  உதவி  அமைப்புகளில்  ஒன்றான  இந்தியாவின் தேசிய பேரிடர்  உதவிப்படை(என்டிஆர்எப்)யின்  தலைவர்,  தப்பிப்பிழைத்தவர்களையும் இறந்தவர்களின்  உடல்களையும்  மீட்பதற்கு பல  நாள்களாகும்  என்றார்.

காட்மண்டு  தெருக்கள்  குறுகலானவை  என்பதால் கனரக  இயந்திரங்களைக்  கொண்டு  செல்வது  சிரமமாக  இருப்பதாய்  என்டிஆர்எப் தலைமை  இயக்குனர்  ஒ.பி. சிங்  கூறினார்.

“இடிபாடுகளை  எல்லாம்  அப்புறப்படுத்த  வேண்டும். அதற்கு  நீண்ட  நேரமாகலாம். பல வாரங்கள்கூட  ஆகலாம்”,  என்றாரவர்.

நேற்றிரவு  மூன்றாவது  நாளாக  நேப்பாளி  மக்களில்  பலர்  வெட்ட  வெளியில்தான்  படுத்துறங்கினர். பலருடைய வீடுகள் இடிந்து  தரை மட்டமாகி  விட்டன. மேலும், பலருக்கு  தொடர்ந்து  அதிர்வுகள்  உணரப்படுவதால்  வீடுகளில்  படுக்க  அச்சம்.

மற்ற  இடங்களைப்  போலவே  காட்மண்டுவிலும் ஆயிரக்கணக்கானோர்  நடைபாதைகளிலும்  சாலைகளிலும் பூங்காக்களிலும்  கூடாரங்களிலும்  படுத்துறங்கினர். மருத்துவமனைகள்  நிரம்பி  வழிகின்றன. தண்ணீர், உணவு  கிடைப்பது  அரிதாகி  வருகிறது. மின்சார  விநியோகமும் குறைந்து  கொண்டே  வருகின்றது.

உதவிகள்  கிடைப்பது  தாமதமாவதால்  மக்களில் பலர்  அரசாங்கத்தைக்  குறைகூறத்  தொடங்கியுள்ளனர்.

“அரசாங்கம்  எங்களுக்கு  எதுவுமே  செய்யவில்லை”, என  அனில்  கிரி  கூறினார். அவர்  20  தன்னார்வலர்களின்  உதவியுடன்  இடிபாடுகளில்  சிக்கிக்கொண்டிருப்பதாக  நம்பப்படும்  அவரின்  இரு  நண்பர்களைத்  தேடிக்  கொண்டிருக்கிறார். “இடிபாடுகளை  நாங்களே  வெறுங்  கைகளால்  அப்புறப்படுத்திக்  கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.

மிகப்  பெரிய  அழிவு  என்பதால்  மீட்புப்  பணிகளை  மேற்கொள்ள  அதிகாரிகள்  தடுமாறுகிறார்கள்.

“வெளிநாடுகளிலிருந்து  மீட்புப் பணிகளுக்கான  பொருள்களையும்  மருத்துவ  உதவிகளையும்  எதிர்பார்க்கிறோம். மீட்புப்  பணியாளர்களின்  உதவியும் மிகவும்  தேவைப்படுகிறது”, என்றார்கள்.

-ராய்ட்டர்ஸ்