மலேசிய மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்), சாபா சென்று அங்கு நடைபெறும் மே 1 பேரணியைக் கண்காணிக்கும். அப்பேரணியில் பல முக்கிய அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொள்வதற்கு அம்மாநில மெஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை கோலாலும்பூரிலும் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு நிலைமை எவ்வளவோ மேல். உத்தரவுப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே போலீசாரின் நிபந்தனையாகும்.
“இரண்டு இடங்களிலும் நடக்கும் பேரணிகளையும் கண்காணிக்க வேண்டும் என ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு என்ற முறையில் ஆணையம் பொறுப்பாக நடந்து கொள்ளும்”, என சுஹாகாம் தலைவர் ஹஸ்மி அகாம் ஓர் அறிக்கையில் கூறினார்.
சாபா பேரணிக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்த அவர், அமைதியாக ஒன்றுகூடுவதற்கு மக்களுக்குள்ள அடிப்படை உரிமைகளையும் பேரணியால் பாதிக்கப்படக்கூடியவர்களின் உரிமைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு என்றார்.
“பேரணிக்கு எதிர்ப்பு என்பதை வைத்து மட்டுமே அதன்மீது கட்டுப்பாடுகளை விதிப்பது நியாயமாகாது.
“மக்கள் பேரணிகள் தற்காலிகமாக அன்றாட இயக்கங்களுக்கு இடையூறாக அமையலாம் ஆனால் அதுவும் தற்காலிகமாகத்தான்”, என்றும் ஹஸ்மி கூறினார்.