அம்பிகாவை தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் மனு நிராகரிக்கப்பட்டது

 

Ambigaremandrejectedநேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகாவை தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவைப் பெறுவதில் போலீசார் தோல்வி கண்டனர். ஆனால், கைது செய்யப்பட்ட இதர 29 இளைஞர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

வழக்குரைஞர் மிசேல் யேசுடாஸ் அளித்த தகவலின்படி 23 இளைஞர்களை மூன்று நாள்களுக்கு தடுத்து வைக்கும் ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதர மூவருக்கும் ஒரு நாள் ரிமாண்ட் உத்தரவு அளிக்கப்பட்டது.

டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக். பாஸ் மத்திய குழு உறுப்பினர் ஹத்தா ரமலி மற்றும் பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட அம்பிகா, சிறையில் இன்னும் மூன்று நாள்களுக்கு அடைக்கப்படவுள்ள 29 இளைஞர்களை மக்கள் மறந்து விடக்கூடாது. அவர்களின் ரிமாண்ட் “முட்டாள்தனமானது” என்று கூறினார்.

“அவர்கள் கைவிலங்கிடப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு காவல்நிலயத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.

“நான் மிகவும் கவலையுறுகிறேன். அவர்கள் இந்நாட்டின் இளைஞர்கள். அவர்கள் ஏன் இப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான கடப்பாடு நமக்கு உண்டு.

“அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதற்கு முன்பாகவே அவர்கள் கிரிமினல்களைப் போல் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு”, என்று அம்பிகா மேலும் கூறினார்.

மேலும், சமூக ஆர்வலர் ஹிசாமுடின் ராயிஸ் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரமலியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகேஆரின் இன்னொரு உதவித் தலைவரான தியன் சுவாவையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தாம் பெர்மாத்தாங் பாவ்வை நோக்கி சென்று கொண்டிருப்பதாக போலீசாரிடம் கூறிய தியன், அதன் பின்னர் போலீசார் அவருடன் இன்னும் தொடர்புகொள்ளவில்லை என்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.