பொருள்கள் மற்றும் சேவைகள் வரிக்கு (ஜிஎஸ்டி) எதிர்ப்பு தெரிவிக்கவும் தொழிலாளர் தினத்தை கொண்டாடவும் மே தினத்தன்று 20,000க்கு மேற்பட்டோர் அமைதியான பேரணியில் பங்கேற்றனர்.
அப்பேரணியில் ஒரு தனிப்பட்ட புகைக்குண்டு சம்பவத்துடன் போலீசார் புகழ் பாடாத வாசகங்களும் காணப்பட்டன.
அனைத்துலக தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்படி இருந்தும் இங்கு போலீசார் பலரைக் கைது செய்தனர், பலரை விசாரணைக்காக தடுத்து வைத்தனர் என்றார் சந்தியாகு.
இது ஒளிவு மறைவு அற்ற போலீஸ் அதிகாரத் துஷ்பிரயோகம் என்பதோடு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சி மிக்க வியூகம் என்று நான் முன்பு கூறியுள்ளேன்; மீண்டும் கூறுகிறேன் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு கூறினார்.
இக்கைது நடவடிக்கையில் எதிர்க்கட்சி தலைவர்களும், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களும், இன்னும் பல அரசு சார்பற்ற அமைப்புகளும் போலீசாரின் இலக்குகளாக இருக்கின்றன என்றாரவர்.
இத்திடீர் கைதுகள் அரசாங்கத்திடம் சகிப்புத் தன்மை இல்லை என்பதையும் அரசாங்கத் தலைவரின் அதிகாரங்கள் சுருங்கி வருவதையும் காட்டுகின்றன.
இவை அனைத்தும் பேச்சுரிமைக்கும், ஒன்றுகூடுவதற்கும் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளை அவர்கள் நீண்டகாலமாகவே அலட்சியப்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டுவதாக சார்ல்ஸ் மேலும் கூறினார்.
கவலைப்படாத நஜிப்
போலீசாரின் அதிகாரத் துஷ்பிரயோகம் மக்களைப் பற்றியோ, அவர்களது பிரச்சனைகளைப் பற்றியோ நஜிப் அரசாங்கம் கவலைகொள்வதில்லை என்பதையும் பறைசாற்றுகிறது.
அதிகரித்து வரும் செலவினம் மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த விலை உயர்வுகள் நடுத்தர மற்றும் தொழிலாளர்களுக்கு மேலும் பேரிடியாக இருக்கிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணி இப்பிரச்சனைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்குப் பரிகாரம் காண்பதற்கான நோக்கம் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், அதனை வரவேற்பதற்கு மாறாக போலீசார் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தினர் என்றார்.
“மக்கள் முதலில்” என்ற அதன் கூவலை அரசாங்கம் மதிக்கிறது என்றால் போலீஸ் படைத் தலைவரின் கொடுமையான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும், மக்களின் இன்னல்களைக் கேட்டறிய வேண்டும் என்பதை வலியுறுத்திய சார்ல்ஸ், அவ்வாறான ஓர் அரசாங்கம் அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள சுதந்தரத்தை பயன்படுத்தியதற்காக மக்களை நிச்சயமாக சிறையில் தள்ளாது அல்லது குற்றம் சுமத்தாது என்றார்.
2008-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் முடிவிலிருந்தே அரசாங்கம் மக்களைப் பார்த்து எந்நேரத்தில் என்ன நடக்குமோ என்று நடுங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.
இதுதானே உண்மை நிலவரம் !!!!