புக்கிட் அமான் கோழைகள்: அம்பிகா சாடல்

ambikaஇரவு  முழுக்க  போலீஸ்  நிலையத்தில்  தடுத்து  வைக்கப்பட்ட  அனுபவத்தை  நினைவுகூர்ந்த  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  உத்தரவுப்படி  நடந்துகொள்ளும்  அடிநிலை  போலீஸ்  அதிகாரிகளைக்  குறைகூற விரும்பவில்லை   என்றார்.

அவரது  ஆத்திரமெல்லாம்  புக்கிட்  அமானில்  உள்ள  அவர்களின்  மேலதிகாரிகளின்மீதுதான்.

“என்னை  பொறுத்தவரை,  உத்தரவுகள்  இடுகிறார்களே  முகமும்  பெயரும்  தெரியாதவர்கள்,  அவர்களே  உண்மையில்  கோழைகள். எதோ  திட்டத்துடன்  அவர்கள்  வேலை  செய்கிறார்கள்.

“களத்தில்  பணியாற்றும்  போலீசார்  நல்லமுறையில்  நடந்து  கொண்டார்கள். இடப்பட்ட  கட்டளைப்படி  நடந்து  கொள்வதாக  அடிக்கடி எங்களிடம்  தெரிவித்தார்கள். அவர்களுடன்  எனக்கு  எந்தத்  தகராறும்  இல்லை”, என  அம்பிகா மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

ஜிஎஸ்டி- எதிர்ப்புப் பேரணியில்  கலந்து  கொண்டதற்காக வாக்குமூலம்  அளிக்கக்  கடந்த  வெள்ளிக்கிழமை  டாங்  வாங்கி  போலீஸ்  நிலையத்துக்குச்  சென்ற  அம்பிகாவை சில  மணி  நேரம்  காக்க வைத்துதான் வாக்குமூலம்  பதிவு  செய்தார்கள்.

“அன்றிரவே  எனக்கு  அழைப்பு  வந்தபோது, மறுநாள்  வரை  காத்திருக்க  முடியாதா  என்று  என்  வழக்குரைஞரும்  நானும்  கேட்டோம். ஆனால், அன்றே  வர  வேண்டும்  எனப்  பிடிவாதமாகக்  கூறி விட்டனர். இரவு  9.30  வாக்கில்  அங்கு  சென்றேன். அதிகாலை  3 மணிக்குத்தான்   வாக்குமூலம்  பதிவு  செய்யப்பட்டது”, என்றார்.

போலீசார்  கைது  செய்யவும்  தடுத்து  வைக்கவும்  அவர்களுக்குள்ள  அதிகாரத்தை  விசாரணைக்கு  உதவியாக  பயன்படுத்திக்  கொள்ள  வேண்டும்,, ஆனால்  அவர்கள்  அதைத்  “தண்டிக்க”ப் பயன்படுத்திக்  கொள்வதாக அம்பிகா  கூறினார்.

ஆனால், மெஜிஸ்திரேட்டை  அவர்  பாராட்டினார்.

மெஜிஸ்திரேட் தம்மையும் டிஏபி  நாடாளுமன்ற  உறுப்பினர்  அந்தோனி  லோக்,  பிஎஸ்எம்  தலைமைச்  செயலாளர்  எஸ்.அருள்செல்வன்  ஆகியோரையும்  4-நாள்  காவலில்  வைப்பதற்கு  போலீஸ்  செய்த  மனுவைப்  புறந்தள்ளி  சட்டப்படி  நடந்து  கொண்டதாக   அம்பிகா   கூறினார்.